

கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத் தனது நாக்கையே துண்டித்து எறிந்த வாலிபரின் வெறித்தனமான செய்கை கண்டு விக்கித்து நின்றேன்.
கிரிக்கெட் மோகம் என்பது வெறியாக மாறிப் பல வருடங்கள் ஆகிவிட்டன. அது ஒரு விளையாட்டு என்பதையும் கடந்து, ஒவ்வொருவரின் சுய மரியாதையையும் பாதிக்கும் ஒன்று என்பதுபோலச் செய்திகள் திட்டமிட்டுப் பரப்புரை செய்யப்படுகின்றன.
போட்டிகள் துவங்கும் நாளுக்கு முன்பாகவே எந்த அணி வெல்லும்..? ஒவ்வொரு அணியின் பலம், பலவீனம் என்னென்ன என்பதுகுறித்து ஊடகங்கள் யூகங்களை வெளியிடுகின்றன. இதுபோன்ற புறச் சூழல்கள் கட்டமைக்கும் தன்மைகளினால் கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தியில் ஒருவிதப் பதற்றம் செயற்கையாக உண்டாக்கப்படுகிறது.
விளையாட்டு எனில், அதில் வெற்றியும் இருக்கும் தோல்வியும் இருக்கும் என்ற மிகச் சாதாரண உண்மையைக்கூட கிரிக்கெட் ரசிகர்கள் உணர்வதில்லை. இந்நிலையில், எதிர்பார்த்த வெற்றி கிட்டாதபோது, நிறைய பேர் மனம் உடைந்து அழுவது, கிரிக்கெட் ஆட்டக்காரர்களின் இல்லங்களைத் தாக்குவது, அவர்களின் படங்களைத் தீயிட்டுக் கொளுத்துவது என்பது போன்ற உணர்வின் எல்லைக் கோட்டைத் தாண்டிச் செயல்படுகிறார்கள்.
நாக்கையே அறுத்துக் கொண்ட இந்த வாலிபரின் செய்கையும் அதுபோன்ற ஒன்றே. இதுபோன்ற விபரீதப் போக்குகள் அதிகரித்துவருவது எந்த வகையிலும் நமக்குப் பெருமை சேர்க்காது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்தால் நல்லது.
- கே. எஸ். முகமத் ஷூஐப்,காயல்பட்டினம்.