

உலக வரைபடத்தில் சிங்கப்பூர் என்ற சின்னஞ் சிறிய நாட்டைச் சகல துறைகளிலும் உலகம் வியக்கும் வகையில் செல்வம் கொழிக்கும் நாடாக மாற்றியமைத்த ‘லீ குவான் யூ' என்ற தனிமனிதரைப் பற்றிய கட்டுரை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் வகையில் அமைந்த, அனைவரும் படிக்க வேண்டிய ஓர் அருமையான கட்டுரை.
உலக அரசியல்வாதிகள் குறிப்பாக, இந்திய அரசியல்வாதிகள் கடைப்பிடிக்க வேண்டிய அரசியல் நெறிமுறைகளுடன் வாழ்ந்து காட்டியவர் லீ குவான் யூ. ‘திறமையான, நேர்மையான, உண்மையான சேவை மனப்பான்மையுள்ள அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குச் சிறப்பான பயிற்சி கொடுத்துக் கடும் சோதனைகளுக்குப் பின்னரே அமைச்சர் பதவி கொடுத்தார்’ என்ற செய்தி வியக்க வைக்கிறது.
‘தனது வாரிசுகளே ஆனாலும் அவர்களின் தகுதிகளை மற்றவர்களின் கேள்விக்கு உள்ளாக்காமல் அவர்களுக்குத் தேவையான கல்வி அறிவையும் தகுதிகளையும் உருவாக்கிய பின்னரே உயர் பதவிகள் அளித்தார் என்ற செய்தி இன்றைய நம் இந்திய அரசியல்வாதிகளுக்கு ஒரு சிறந்த பாடம்.
சிங்கப்பூரை வளர்க்க ‘லீ குவான் யூ' தன் மொத்த உழைப்பையும் ஆயுளையும் அர்ப்பணித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
- கே.பி.எச். முகம்மது முஸ்தபா,திருநெல்வேலி.
***
லீ சிறந்த தலைவர். சுய ஒழுக்கம் நிறைந்தவர். தகுதிகளையும் திறமைகளையும் ஆராதிக்கத் தெரிந்தவர். அவரைச் சர்வாதிகாரி என்று சிலர் விமர்சிப் பார்கள்.
தன்னளவில் மட்டுமின்றி, சமூக அளவிலும் சுய ஒழுக்கம் காக்கும் மனவலிமையுள்ள ஒருவர் சர்வாதிகாரியாக இருப்பதில் தவறெதுவும் இருப்பதாகத் தெரிய வில்லை. அது மட்டுமின்றி, அயல்நாட்டிலிருந்து வந்து சிங்கப்பூரின் வளர்ச்சிக்குப் பங்களித்த அனைவரையும் சொந்த நாட்டுச் சகோதரர்களாகப் பாவிக்கும் அவரது பரந்த மனம் நமது இந்திய அரசியல்வாதிகளுக்கு மிகவும் அவசியம்.
இந்திய மண்ணில் பிறந்து சமயரீதியாகச் சிறுபான்மை யாக விளங்கும் மக்களை இந்தியாவுக்கு விரோதமானவர்களாகப் பாவிக்கும் மோசமான போக்குள்ள அரசியல் வாதிகள் குறிப்பாக, இந்துத்துவ அரசியல்வாதிகள் லீ குவான் யூவிடம் பாடம் படிக்க வேண்டும்.
- யூசுப் சித்திக்,‘தி இந்து’ இணையதளம் வழியாக...