

‘இப்போது உருவாகிவரும் புதிய சமூக, பொருளாதாரச் சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்டு பிற்படுத்தப்பட்ட சமூகங்களை அடையாளம் காண வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதை அரசு ஏற்க வேண்டும்’ என்று தலையங்கத்தில் (பிற்படுத்தப்பட்டவர்கள் யார்?) கூறப்பட்டுள்ளது.
பிற்படுதப்பட்டவர்கள் யார் என்பதை அடையாளம் காண, பொருளாதாரச் சூழல் ஒரு அளவுகோல் அல்ல.
சமூகரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கியுள்ளனரா என்பதைக் கண்டறிவதே சரியான அளவுகோல் ஆகும். 1951-ல், இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 15(4)-ல் திருத்தம் கொண்டுவரப்பட்டபோது, நாடாளுமன்ற விவாதம் நடைபெறும்போது சில உறுப்பினர்கள் சமூக, கல்விரீதியாகப் பார்ப்பதோடு பொருளாதாரரீதியாகவும் பரிசீலிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பினர்.
அப்போது, பேசிய ஜவஹர்லால் நேரு, பொருளாதாரத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று அழுத்தம் திருத்தமாக அறிவித்தார். இறுதியில், பொருளாதார அடிப்படையையும் அளவுகோலாக எடுத்துக்கொள்ள வேண்டுமா, வேண்டாமா என்பதுபற்றி நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்று, பொருளாதார அடிப்படை கூடாது என 243 பேரும், பொருளாதார அடிப்படை வேண்டும் என 3 பேரும் வாக்களித்ததன் பேரில், அரசியல் சட்டப்பிரிவு 15 (4)-ல் “சமூகரீதியாகவும் கல்விரீதியாகவும் பிற்படுத்தப்படவர்கள்” என்று கூறப்பட்டது.
எனவே, பிற்படுத்தப்பட்டவர்கள் யார் என்பதைக் கண்டறிய பொருளாதார அடிப்படையை அளவுகோலாகப் பயன்படுத்துவது அரசியல் சட்டத்துக்கே விரோதமானது.
- பொ. நடராசன் நீதிபதி (பணி நிறைவு),உலகனேரி.