சரியான புரிதல்

சரியான புரிதல்
Updated on
1 min read

காந்தியின் வருகைக்குப் பின்னர்தான் நாட்டின் சுதந்திரத்துக்கான கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்தது என்ற உண்மையை வெளிப்படுத்த ஒரு புகைப்படமே சாட்சி என்று கூறியதன் மூலம் பல காலம் மறைக்கப்பட்ட வரலாற்று உண்மையைக் கட்டுரையாளர் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்.

நூறு ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸை யாரிடமிருந்து காந்தி மீட்டாரோ அவர்களிடமே மீண்டும் சரணடைந்துவிட்டது.

இந்த காந்தி (ராகுல்) மீண்டும் அவர்களிடமிருந்து மீட்டெடுத்தால், வருங்காலத்தில் எதிர்க் கட்சி இருக்கையாவது கிடைக்கும்.

காந்தியின் ஒப்பற்ற தியாகத்தையும், மாண்பையும் கேலியாக நினைத்து, கோட்சேவுக்குக் கோயில் கட்டக் குரல் எழுப்புபவர்களுக்கு இந்தக் கட்டுரை காந்தியைப் பற்றிய சரியான புரிதலைக் கொடுக்கும்.

- ந. குமார், திருவாரூர்.

***

குஜராத்தி காந்தி... பார்சி கேண்டி!

இரு காந்திகளின் மாறுபட்ட தன்மையை விளக்கிய கட்டுரை மிகச் சிறப்பு. இரண்டு பகுதிகளாக வெளியிட்டிருக்கலாம். ராகுல் காந்திக்கும் மகாத்மாவுக்கும் ஸ்தானப் பொருத்தம்கூடக் கிடையாது.

இந்திரா காந்திக்கு நேருவையும் விடமுடியவில்லை, காந்தியையும் விடமுடியவில்லை. முதலில் இந்திராநேரு காந்தி என்ற பெயரிலேயே தேர்தலில் நின்றார். பார்சி கேண்டிக்கும் குஜராத்தி காந்திக்கும் வேறுபாடு தெரியாது இன்றும் மக்கள் இருக்கின்றார்கள்.

300 ஆசிரியர் கல்வி பயிலும் மாணவிகளோடு உரையாடும் போது ‘இந்திரா காந்தி யார்? காந்தியின் மகளா, மருமகளா?' என்று கேட்டேன். மூன்று பேர் மௌனம் சாதித்தனர். மற்றவர்களில் சிலர் மகள் என்றும், மற்றவர் மருமகள் என்றும் சொன்னார்கள். மகள் என்றால், நேருவின் மகள் யார் என்று கேட்டேன். கேள்வியும் தவறு, பதிலும் தவறு என்று உணர்ந்தார்கள்.

மருமகள் என்று சொன்னவர்கள் அவரது கணவர் பெயர் என்ன என்று அறியவில்லை. தனது நோயுற்ற தாயைப் பேணிய பெரோசின் மீது காதல் கொண்டு மணம் புரிந்த இந்திரா அவரது மதத்தை ஏற்கவில்லை. அது தவறு என்று சொல்ல மாட்டேன். ஆனால், மக்களைக் குழப்ப அவரது பெயரில் இருந்த ‘காந்தி’ மட்டும் தேவைப்பட்டது.

- எஸ்.எஸ். இராஜகோபாலன்,சென்னை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in