

‘ஆங்கிலேயர்களின் கையாளா காந்தி?’ கட்டுரை, காந்தியைப் பற்றிய அவதூறுகளுக்கு மிகச் சரியான பதிலடி.
விமர்சனம் என்ற பெயரில் காந்தியைத் தூற்றுவதற்கு ஒரு கூட்டம் இருந்துகொண்டேதான் இருக்கிறது. அந்த வரிசையில் மார்கண்டேய கட்ஜுவும் சேர்ந்துகொண்டார்.
காந்தியின் வாழ்க்கை கண்ணாடியைப் போன்றது. எவ்வித ஒளிவுமறைவுமற்ற வாழ்க்கையை மேற்கொண்ட காந்தி, நேர்மையாக, மனசாட்சிப்படி நடந்தவர்.
காந்தி விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரல்லர். ஆனால், தியாகங்களும் போராட்டங்களும் நிறைந்த அவரது வாழ்க்கை, அறிவார்த்தமாகவும், பரந்த மனதுடனும் அணுகப்பட வேண்டும். கட்ஜு தெரிவித்த ஆதாரமற்ற, தரக்குறைவான கருத்துகள் கண்டனத்துக்குரியவை.
- அ. சிவராமன்,மேட்டூர் அணை.
***
காந்தி பற்றிய மார்க்கண்டேய கட்ஜுவின் கருத்து சிறுபிள்ளைத்தனமானது. காந்தியத்தின் பெருமைகள், குறைபாடுகள் பற்றி ஜவாஹர்லால் நேருவைவிட நடுநிலையோடும் நேர்மையோடும் இனி எவரும் எழுதப்போவதில்லை.
மத நல்லிணக்கத்தை, குறிப்பாக, இஸ்லாமியரோடு இணக்கத்தை இடைவிடாது வலியுறுத்தியவர் காந்தி. கோட்சே போன்றோருக்கு அவர்மீது வெறுப்பு வரக் காரணம் இதுதான். உண்மை இவ்வாறு இருக்க காந்தி இந்து மத ஆதரவாளராகச் செயல்பட்டார் என்று விஷக் கருத்தைப் பரப்புகிறார் கட்ஜு.
- ஆர்.எஸ்.ஆர்.,‘தி இந்து’ இணையதளத்தில்…