

வினாத்தாளை ‘வாட்ஸ்அப்’ மூலம் பகிர்ந்துகொண்ட ஆசிரியர்களின் செயல் பொறுப்பற்ற தன்மைக்குச் சரியான உதாரணம்.
மாணவர்களுக்கு முன்னுதாரணமாகவும் வழிகாட்டியாகவும் இருக்க வேண்டிய ஆசிரியர்களே தொழில்நுட்பத்தைத் தவறான வழியில் பயன்படுத்தினால் மாணவர்கள் மனதில் அது எத்தனை ஆபத்தான விளைவை ஏற்படுத்தும்?
எதிர்காலத் தலைமுறை மீது அக்கறை கொண்ட கல்வியாளர்கள், நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கல்வித் தரத்தை மேம்படுத்துவதுபற்றி யோசித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில், சில ஆசிரியர்களின் தவறான நடவடிக்கை நம்பிக்கையைக் குலைத்துவிடக் கூடாது.
- பி. நடராஜன்,
மேட்டூர் அணை.
***
கவலை தரும் கல்வித்தரம்
தேர்வுகளில் முறைகேடுகள் செய்தாவது மதிப்பெண் பெற வைக்க வேண்டிய நிலைமை தோற்றுவிக்கப்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது. முறைகேடுகள் மூலம் அதிக மதிப்பெண் பெற வைக்கப்படும் மாணவர்களும் உற்பத்தி செய்யப்படும் நிலையில் உயர்கல்வி வாய்ப்புகளைத் திறமையான மாணவர்கள் எப்படிப் பெற முடியும்? தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் நிலையில், அப்பள்ளிகளிடையே மிகப் பெரிய அளவுக்கு கல்வி வணிகப்போட்டி உருவாகிவிட்டது. இதன் விளைவாக, பள்ளிகள் மதிப்பெண் தொழிற்சாலைகளாக மாறியுள்ளன. கல்வி என்பது சமூகத்தைக் கட்டமைக்கும் முதன்மையான கருவி. அந்தக் கருவி பழுதடைந்துவிடாமல் பாதுகாக்க வேண்டியதுதான் நமது இளைய தலைமுறைக்கு நாம் செய்ய வேண்டிய முக்கியமான கடமை.
- சு. மூர்த்தி,
ஒருங்கிணைப்பாளர், கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு, திருப்பூர் மாவட்டம்