மறு உருவம் பெறட்டும் போராட்டங்கள்
அரசின் ஓர் அங்கமான அரசாங்கத்துக்குச் சட்டமியற்றுதல், நிர்வகித்தல் மற்றும் நீதி வழங்கல் ஆகிய மூன்று முக்கியப் பணிகள் உள்ளன.
இவற்றைச் செயல்படுத்தவே சட்டமன்றம், நிர்வாகத் துறை மற்றும் நீதித் துறை என மூன்று பிரிவுகள் உள்ளன. இவற்றுக்கிடையேயான சுமுக உறவுநிலையும், புனிதத் தன்மையும் ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு முக்கியமானது.
இம்மூன்றில் சாமானிய மனிதன் முதல் பெரும் பணக்காரர்கள் வரை தங்களின் உரிமைகளையும், பாதுகாப்பையும் பெற நாடும் உன்னத அமைப்பாக நீதிமன்றம் திகழ்கின்றது. அத்தகைய துறையின் பணி எத்தகைய முக்கியமானது என்பது அனைவரும் அறிந்ததே. ஒருநாள் வேலைநிறுத்தம் செய்தால் அதனால் ஏற்படும் பாதிப்புகள் எவ்வளவு என்பது யாருக்குத் தெரியுமோ இல்லையோ வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் வழக்கறிஞர்களுக்கு நிச்சயமாகத் தெரியும். தங்கள் உரிமைகளுக்காகப் போராட்டம் நடத்துவது அவர்களின் உரிமைதான்.
தங்கள் துறையில் தேவைப்படும் சீர்திருத்தங்களை ஆக்கபூர்வமான செயல்பாடுகளின் விளைவாகப் பெற வேண்டும். அதுவே, வழக்கறிஞர்களுக்கும் அவர்கள் சார்ந்த நீதித் துறைக்கும் நன்மை பயக்கும். எனவே, அவர்களின் போராட்டம் பொதுமக்கள் மற்றும் அரசாங்கத்தின் இயல்புநிலையைப் பாதிக்காதவண்ணம் இருத்தல் வேண்டும்.
ஒரு பணியின் புனிதத் தன்மை அப்பணியை மேற்கொள்பவர்களால்தான் தீர்மானிக்கப்படுகிறது. நீதி மற்றும் நீதிமன்றத்தின் புனிதத்தைக் காப்பதில் வழக்கறிஞர்களின் பங்கும் இருப்பதால், அதை உணர்ந்து செயல்பட்டு நீதியை நிலைநாட்டுங்கள். தங்கள் உரிமைகளையும், சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் போராட்டங்களை யாருக்கும் தீங்கிழைக்காத மாற்றுப் பாதையில் செலுத்துங்கள்.
- ஜோ.எஸ். நாதன்,கீழக்கரை.
