

வியாழன் தோறும் வெளியாகும் எஸ். ராமகிருஷ்ணனின் ‘வீடில்லாப் புத்தகங்கள்’ மிகவும் அருமையான பதிவு. தற்போது பதிப்பில் இல்லாத, வெகு காலத்துக்கு முன்பு வெளியான புத்தகங்களை வீதியோரம் விற்பனைக்குக் கிடைக்கும் பழைய புத்தகக் கடைகளில் கண்டெடுத்து, அவர் வாசகர்களுக்கு வழங்கும் ஓர் அருமையான பகுதி.
நாம்மால் இதுவரை அறியப்படாத ஓர் உலகைக் கண்டுபிடித்து, அவர் நமது கண் முன் நிறுத்துகிறார். அது மட்டுமல்ல, தமிழில், ஆங்கிலத்தில் இப்படியெல்லாமா புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன என்ற ஆச்சரியத்தையும் அவரது புத்தகக் கண்டுபிடிப்பு நமக்குள் ஏற்படுத்துகிறது.
நானும் பழைய புத்தகங்களின் ஆர்வலன்தான். எந்தப் புதிய இடங்களுக்குச் சென்றாலும், எனது கண்களும் மனதும் பழைய புத்தகக் கடைகளைத் துழாவியபடியே இருக்கும். பழைய புத்தகக் கடைகளில் தூசு, தும்மல்களின் இடைஞ்சல்களுக்கிடையே நான் கண்டடைந்த செல்வங்கள் ஏராளம்.
ஆனால், என்ன ஒரு துரதிர்ஷ்டம்... இப்போதெல்லாம் பழைய புத்தகக் கடைகள் பள்ளி, கல்லூரி மற்றும் கம்ப்யூட்டர் சம்பந்தமான பாடப் புத்தகங்கள் விற்கும் கடைகளாக மாறிப்போனதுதான்!
- கே எஸ். முகமத் ஷூஐப், காயல்பட்டினம்.