

சாதியவாதிகளும் மதவாதிகளும் வன்முறையைக் கையில் எடுப்பது ஒன்றும் புதிது அல்ல. மதத்தின் பெயரால் அவர்கள் கூறும் உண்மைக்குப் புறம்பான கருத்துகள், மனிதகுல மேம்பாட்டுக்கு உதவாத செயல்பாடுகள் காலங்காலமாகச் சீர்திருத்தவாதிகளால் எதிர்ப்பைச் சந்தித்துக்கொண்டுதான் இருக்கின்றன.
அதை அறிவியல்பூர்வமாக ஆதாரத்துடன் நிரூபணம் செய்ய முடியாத காரணத்தால், இத்தகைய அமைப்புகள் இறுதியாக வன்முறையைத்தான் தங்களின் பாதையாகத் தேர்ந்தெடுக்கின்றன. அந்தப் பாதையில் சாக்ரடீஸில் தொடங்கி, தற்போது தபோல்கர், கோவிந்த பன்சாரே என சீர்திருத்தவாதிகளின் உயிர்கள் வெறியர்களால் பறிக்கப்படுகின்றன.
இத்தகைய கொலைவெறி பிடித்தவர்களை உருவாக்கும் அமைப்புகள் என்ன எதிர்பார்க்கின்றன. மக்கள் சிந்திக்கக் கூடாது என்றா? இல்லை, அடித்தட்டு மக்கள் முன்னேறக் கூடாது என்றா? மிகவும் அச்சுறுத்தலானவை இவர்களின் சித்தாந்தம். இவர்கள் மனித குலத்தைக் கால ஓட்டத்தில் பின்னோக்கி இழுத்துச் செல்பவர்கள்.
ஆனால், தங்களுடைய தள்ளாத வயதிலும் சமூக முன்னேற்றத்துக்காகப் போராடிய தபோல்கர், பன்சாரே ஆகியோரின் பணி மனிதகுலத்தை அறிவியல் மற்றும் சமதர்மப் பார்வையில் முன்னெடுத்துச் செல்பவை.
பொதுவாகவே புரட்சியாளர்கள், சீர்திருத்தவாதி கள் மண்ணில் புதைக்கப்படுபவர்கள் அல்ல; அவர்கள் விதைக்கப்படுபவர்கள். அவ்விதையில் இருந்து ஆயிரமாயிரம் தபோல்கர்கள், பன்சாரேக்கள் முளைத்துக் கொண்டே இருப்பார்கள். பன்சாரேயின் இறுதி ஊர்வல முழக்கங்களே அதற்குச் சாட்சியாக அமைந்திருக்கிறது.
- ஜோ.எஸ். நாதன்,கீழக்கரை.