

‘தலைவர்கள் பஞ்சமும் தடுமாறும் மக்களும்!’ என்ற கட்டுரையில், தங்கர்பச்சான் இன்றைய அரசியல்வாதிகளையும் மக்களின் எதிர்பார்ப்புகளையும் சரியாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளார். மக்கள் தங்களின் கோபத்தை வாக்குச்சாவடியில் வாக்களிக்கும்போதுதான் காண்பிக்க முடிகிறது. டெல்லி தேர்தல் முடிவுகளின் பின்னணியை ஊடகங்கள்கூடச் சரிவரப் பிரதிபலிக்கவில்லை.
இதை மோடியின் செயல்பாடுகளுக்கு எதிரான தீர்ப்பு என்றுதான் எழுதிக்கொண்டு இருக்கின்றனவேயன்றி, மக்கள் உண்மையான மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்பதைத் தெரிவிக்கவில்லை. மக்கள் எதிர்பார்த்த மாற்றம் ஆஆகவிடம் கிடைக்கவில்லை என்றால், இன்று மோடிக்கு நேர்ந்த அதே கதிதான் நாளை ஆஆகவுக்கும் நேரும். மக்கள் மாற்றத்தைக் கொண்டுவருபவரைத்தான் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
மாற்றை அல்ல. எனவேதான், தங்கர்பச்சான் கட்டுரையில் நேர்மையான ஊடகங்கள் தேவை என்பதைத் தெளிவாகத் தெரிவித்துள்ளார். ஊடகங்கள் சரியான பாதையில் பயணித்தால், நமக்குச் சரியான தலைவர்கள் கிடைப்பார்கள்.
மக்களுக்குப் பாடுபடும் தலைவர்களை ஊடகங்கள் மக்களிடம் அடையாளம் காட்ட வேண்டும். நல்ல தலைவர்களை நம்பித்தான் மக்கள் வாக்களிக்கின்றார்கள். இதன்மூலம் நல்ல சிந்தனையை தங்கர்பச்சான் விதைத்துள்ளார்.
- ஜீவன்.பி.கே.கும்பகோணம்.