

விவசாயம் சார்ந்த தமிழர்களின் பண்பாட்டுக் கோலங்களை தங்க. ஜெயராமன் மிக அழகாகப் பதிவு செய்த்துள்ளார். “சோழ நாடு சோறுடைத்து...” எனும் சொல்லுக்கேற்பத் தஞ்சையின் விவசாயம்சார் நிகழ்வுகள் எப்போதுமே வாசிக்க இன்பம் தருபவை.
அந்தக் காலங்களில் எங்கள் பகுதிகளில் எல்லா வீடுகளிலுமே நெல்லைச் சேமித்து வைக்கும் ‘நெல்லறை’ இருக்கும். வீடு கட்டும்போதே நெல்லறையையும் சேர்த்தே கட்டுவார்கள். அந்துப்பூச்சியின் கடியையும் பொறுத்துக்கொண்டு அந்த நெற்குவியலின் மீது விழுந்து புரளுவோம். ஒரு மூட்டை நெல் என்பது அரைக் கோட்டையாகும். நெல் அளக்கும் மரக்கால் வைத்து அளந்து போடுவார்கள். வீட்டுக்கு வரும் நெல்லைக் கொண்டுபோய் அவித்து, அரிசியாகக் கொண்டு வரும் பெண்களும் அப்போது இருந்தார்கள். நெல்லோடு சேர்ந்து வளர்ந்தது தமிழர் பண்பாடு. நெல்லுக்கு அரண் செய்ததாலே ‘திருநெல்வேலி’ என்ற பெயரும் வந்தது.
இன்றைய இளம் தலைமுறையினருக்கு நெல் எப்படியிருக்கும் என்பதாவது தெரியுமா?
- கே. எஸ். முகமத் ஷூஐப்,காயல்பட்டினம்.