

‘நலம் வாழ’ பகுதியில் ‘கர்ப்பைப்பை புற்றைத் தடுக்கலாம்’ எனும் தலைப்பில் வந்துள்ள செய்தியில் இரண்டு தவறுகள் உள்ளன, ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை (சர்விக்கல் கேன்சர்) உண்டாக்கும்; கருப்பை புற்றுநோயை (யூட்டரின் கேன்சர்) இது உண்டாக்காது.
இதற்கான ஹெச்பிவி தடுப்பூசி கருப்பை வாய்ப் புற்றுநோயைத்தான் தடுக்கும்; கர்பப்பை புற்றுநோயைத் தடுக்காது. மேலும் இதை எந்த வயதிலும் போடமுடியாது; போடவும் கூடாது. ஒன்பது வயது முடிந்த பெண்களுக்கு இதைப் போடுவது வழக்கம்.
இன்னும் சரியாகச் சொன்னால் 10 வயது முடிந்த பெண்களுக்கே நம் நாட்டில் இந்தத் தடுப்பூசியைப் போடுகிறார்கள். இதை இப்போது ஆண்களும் போட்டுக்கொள்ளலாம் என்று உலகச் சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது. காரணம், ஆண்களுக்கு பிறப்புறுப்பில் மரு தோன்றுவது இதனால் தடுக்கப்படுகிறது. வாய், தொண்டை, ஆசனவாய் போன்ற இடங்களில் ஹெச்.பி.வி. கிருமிகளால் ஏற்படும் புற்றுநோய் வராது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஒரு கூடுதல் தகவல்.
- டாக்டர் கு. கணேசன்,இராஜபாளையம்.