

கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் உள்ள பல தனியார் கல்வியியல் கல்லூரிகள் மிகப் பெரிய முறைகேடுகளில் ஈடுபட்டுவருகின்றன. அந்தக் கல்லூரிகளில் பயில்பவர்களில் பெரும்பாலானோர், வகுப்புகளுக்கு வராமலேயே தேர்வு எழுதி வெற்றி பெற்றுவிடுகின்றனர். சில ஞாயிற்றுக் கிழமைகளில் சென்று வருகைப் பதிவைச் சரிசெய்துகொள்கிறார்கள்.
இது அனைவருக்கும் தெரிந்தேதான் நடக்கிறது. அரசுக் கல்லூரிகளில் முழுமையாக ஓராண்டும், பல்கலைக்கழகங்கள் வழங்கும் தொலை தூரக் கல்வி நிலையங்களில் இரு ஆண்டுகளும் முறையாகக் கல்வியியல் பயில்பவர்கள் இதனை வேதனையுடன் பார்க்கிறார்கள். ஆசிரியப் பயிற்சியையே ஊழலுடன் தொடங்கும் இது போன்றவர்கள் எப்படி நல்ல ஆசிரியர்களாகத் திகழ முடியும்?
பணத்தைப் பெற்றுக்கொண்டு கல்வியே தராமல் மாணவ மாணவிகள் தேர்வு எழுத வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் கல்வியியல் கல்லூரிகளின் முதலாளிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை? இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடும் தனியார் கல்வியியல் கல்லூரிகளை அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்க கல்வித்துறை முன்வர வேண்டும்.
- ரெ.ஐயப்பன், காந்தியடிகள் நற்பணிக் கழகம்,கும்பகோணம்.