

மருத்துவர் பி.எம்.ஹெக்டேவின் கட்டுரை மிகவும் தேவையான ஒன்று. பல மாத்திரைகளின் தயவில்தான் நான் வாழ்ந்துவருகிறேன்.
வீட்டிலேயே ஒரு சிறு மருந்துக் கடை. குணப்படுத்துவதைவிடப் பக்க விளைவுகள் அதிகம். ‘தி இந்து’ மூலம் ஹெக்டே அறிமுகமானார். அவரைப் பார்த்தேன். முழுமையாக என்னைச் சோதித்த பின், உங்கள் வயதுக்கேற்ற உடல் நலத்துடன் நீங்கள் நலமாகவே இருக்கிறீர்கள்.
மாத்திரைகளைப் படிப்படியாகக் குறைத்துக்கொண்டே வந்து, மூன்று மாதங்களில் அனைத்து மருந்துகளையும் நிறுத்த அறிவுறுத்தினார். அதன்படி எல்லா மருந்துகளையும் நிறுத்திவிட்டேன். உடல்நலம் மோசமாகவில்லை. தலைவலி வருவதும் நின்றுவிட்டது. நல்ல பசி உண்டாகிறது. என்னைப் பொறுத்தவரையில் மருந்தில்லா மருத்துவம் நற்பயனைத் தந்துள்ளது.
- ச.சீ. இராஜகோபாலன்,சென்னை.
***
நம்பிக்கை மருந்து
‘மனிதாபிமான சிகிச்சைக்கு என்ன வழி?’ கட்டுரையைப் படித்தேன். மருத்துவர்களிடையே மனிதம் இன்னும் மரித்துவிடவில்லை என்பதையே இது காட்டுகிறது.
உடம்புக்கு மட்டும் மருந்து கொடுத்தால் போதாது, நமது மனதுக்கும் மருந்து கொடுக்க வேண்டும். அந்த மருந்து - அன்பு, அரவணைப்பு, நம்பிக்கைதான். அது நோயாளியைக் கவனித்துக்கொள்ளும் உறவினரும் செவிலியரும் மருத்துவர்களும் மட்டுமே தரக்கூடியது.
அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ள நோயாளிகளிடம்கூட அன்பாகப் பேசினால், அவர்களுக்கு நம்பிக்கையூட்ட முடியும் என்றுதான் அறிவியலும் சொல்கிறது.
- தவமணி இராமன், உளவியலாளர்,சென்னை.