

கரூர் மாவட்டக் கல்வித் துறை, மதுவருந்தி மயங்கிக் கிடந்த மாணவனைப் பள்ளியிலிருந்து நீக்கிக் கடமையாற்றியுள்ளதைத் தலையங்கத்தில் கண்டேன்.
இச்செயல், அந்த மாணவனுக்கு ஏற்பட்ட தலைக்குனிவல்ல; தேசிய அரசியலமைப்புக்கும் அது சார்ந்த சமூகக் கட்டமைப்புக்கும் ஏற்பட்ட தலைக்குனிவு. பொறுப்பே இல்லாமல் நடந்துகொண்ட கல்வித் துறையின் இழிநிலை வெட்கக்கேடானது. அரசு எவ்வழியோ மக்களும் அவ்வழிதானெனில் என்ன சொல்வது?
- இல. ஜெகதீஷ்,கிருஷ்ணகிரி.
எதிர்க்க வேண்டிய மது எனும் அரக்கனை, சமூகத் தளத்திலிருந்து நீக்க முயற்சிக்காமல், அதை அனுமதித்து சாவகாசமாக வேடிக்கை பார்க்கும் அனைவரும் குற்றவாளிகள்தான். மக்களை நல்வழியில் அழைத்துச் செல்ல வேண்டிய அரசுதான் குற்றவாளியே தவிர, கரூர் மாணவனல்ல. கரூர் மாணவன் மட்டுமல்ல, தமிழகத்தில் மேல்நிலை வகுப்பு மாணவர்கள் பலரிடம் இந்தக் கொடிய பழக்கம் ஊடுருவியிருக்கிறது. என்ன செய்வதென்று தெரியாமல் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள் பெற்றோர்கள். கல்வித் துறை உடனடியாக அம்மாணவனுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்துசெய்ய வேண்டும். அந்த மாணவன் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
- கூத்தப்பாடி மா. கோவிந்தசாமி,தருமபுரி.
‘கரூர் மாணவர் மட்டும்தான் குற்றவாளியா?’ தலையங்கம் அனைவரையும் சிந்திக்க வைத்தது. ‘மாணவர்களை நல்வழிப்படுத்தவே கல்விக்கூடங்கள்’ 100 % சரியானது. அரசின் பொறுப்பற்றதன்மை, ஊடகங்கள் செய்யும் பாதகம் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டியதற்கு, வாசகர்கள் சார்பில் நன்றி!
- டாக்டர் ஜி ராஜமோகன்,சென்னை.