

மக்களாட்சித் தத்துவத்தை மண்ணுக்குள் புதைத்துவிட்டு, எல்லா அரசியல் கட்சிகளும் ஊழல், லஞ்சத்தில் ஊறித் திளைத்து, வளர்ந்தன. மதங்கள், இனங்கள், மொழிகளென்று மக்களைக் கூறுபோட்டு, கோடிகளை ஏப்பம் விடும் பாதகங்களைத் தூக்கி எறிந்து, இன்று இந்தியத் தலைநகரில் ஐம்பதாண்டு கால வரலாற்றில் ஓர் அற்புத அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர் மக்கள்.
லட்சியக் கொள்கைகளைக் கொண்டு, சாமானிய மக்களின் சமத்துவ சமதர்மம் காப்பாற்றப்பட, ஆம் ஆத்மி செயல்பட வேண்டியது இனி அவசியம். இந்த மாற்றம் ஒவ்வொரு மாநிலத்திலும் நிகழுமானால், அப்துல் கலாமின் கனவுகளை இன்னும் 10 ஆண்டுகளில் செயல்படுத்தி, வல்லரசு நாடாக நம் நாட்டை மாற்றும் சாத்தியம் நிகழும்.
- கு.மா.பா. திருநாவுக்கரசு,சென்னை.
***
ஒரு வரலாற்றுப் பதிவு
டெல்லி சட்டசபைத் தேர்தலில், காங்கிரஸ், பாஜக அல்லாத புதிய கட்சியான ஆஆக, அசுர பலத்துடன் மீண்டும் அரியணையில் அமரும் அளவுக்குக் கிடைத்த இந்த அமோக வெற்றி, இந்திய அரசியலில் ஒரு வரலாற்றுப் பதிவு! டெல்லியை இது வரையில் ஆண்ட தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு கட்சிகளின் மேல் உள்ள அதீத கோபத்தை டெல்லி மக்கள், சரியான சமயத்தில், தங்களுக்குக் கிடைத்த வாக்குச் சீட்டு மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
சந்தர்ப்பவாத அரசியலைப் பயன்படுத்தி, தனது சுயலாபத்துக்காக பாஜகவில் கிரண்பேடி சேர்ந்து, முதல்வர் வேட்பாளராகக் களத்தில் நின்றபோதே, ஆஆகவின் வெற்றி உறுதியாகிவிட்டது. டெல்லியை சுமார் 15 வருடங்களாக ஆண்ட காங்கிரஸ் கட்சி இந்த அளவுக்குப் படுதோல்வி அடைந்ததற்கு, அவர்கள் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற மாபெரும் ஊழல்களே காரணமாகி நிற்கின்றன.
அண்ணா ஹசாரே இயக்கத்தில் இருந்து கொண்டு, லோக்பால் மசோதாவைக் கொண்டுவருவதோ, ஊழலை ஒழிப்பதோ நடைமுறையில் சாத்தியமில்லை எனக் கருதி, புதிதாக அரசியல் கட்சி ஆரம்பித்துச் செயல்பட்டால் மட்டுமே ஊழலுக்கு எதிராகப் போராட முடியும் என்கின்ற முடிவுக்குத் தள்ளப்பட்ட அர்விந்த் கேஜ்ரிவால், தான் நினைத்தபடியே, தேர்தலில் மீண்டும் நின்று, பெருவாரியான மக்கள் ஆதரவுடன் அமோக வெற்றி பெற்று சாதித்துக் காட்டிவிட்டார்.
‘மக்களுடன் ஒன்றாகக் கலந்து நின்று டெல்லியை ஆட்சி செய்வதையே விரும்புகிறேன்' என்ற கேஜ்ரிவால் கூறிய வரிகளை, டெல்லி மக்கள் கொஞ்சம்கூட மறக்காமல், அதிக வித்தியாசத்தில் ஆஆகவுக்கு வாக்களித்து, தங்கள் விருப்பத்தை மிகத் தெளிவாக வெளிப்படுத்திவிட்டார்கள்.
- பி. நடராஜன்,மேட்டூர் அணை.