

‘உங்கள் மன இறுக்கம் எப்படி?’ என்ற கருத்துப் பேழை கட்டுரை இன்றைய காலகட்டத்துக்கு மிக அவசியமான ஒன்று. தற்போதைய சூழலில் மனஇறுக்கம் இல்லாது வாழ்பவர்கள் மிகச் சிலரே.
காட்டாற்று வெள்ளம் தான் செல்லும் பாதையில் தடை வந்துவிட்டால், மோதிப்பார்க்கும் முடியவில்லையென்றால், பாதை கிடைக்கும் வழியில் பயணத்தைத் தொடர்ந்துகொண்டேயிருக்கும். மனஇறுக்கமும் அதைப்போலத்தான், வழியில் ஏதாவது தடைகள் ஏற்படும்போது நேர்மறையாக எடுத்துக்கொண்டால் நாம் செல்ல வேண்டிய இலக்கைச் சுலபமாக அடையலாம்.
எதிர்த்து நின்று தடை ஏற்படுத்தினால், செல்ல வேண்டிய இலக்குக்குச் சென்றடைவதில் தாமதம் ஏற்படுவதுடன் இழப்புகளுக்கும் நாம் ஆளாக நேரிடும். ‘நாம்தான் நமது சொந்த விருப்புவெறுப்புகளின் அடிப்படையில் மனஇறுக்கங்களை நல்லவையாகவோ தீயவையாகவோ மாற்றிக்கொள்கிறோம்’ என்று கட்டுரையாளர் கூறியிருந்த விதம் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அருமையான கருத்து.
- வீ. சக்திவேல்,தே.கல்லுப்பட்டி.
***
இன்றைய இயந்திரமயமான வாழ்க்கைச் சூழலில் படிக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் மன இறுக்கம் என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
மனதில் தோன்றும் எண்ணங்களால் ஏற்படும் மன இறுக்கத்தைப் போக்குவதற்கு ஒரே வழி, மனதையும் உடலையும் செம்மைப்படுத்த வேண்டும் என்பதையும், அதற்கான தீர்வுகளையும் எல்லோரும் புரியும் படியாக எளிய வார்த்தைகளில் கட்டுரை ஆசிரியர் சொல்லியிருப்பது மிக அருமை.
எல்லோரும் கட்டாயம் படிக்க வேண்டிய கட்டுரை. இப்படியான விழிப்புணர்வுக் கட்டுரைகளை வெளியிட்டுவரும் ‘தி இந்து’வுக்கும் நன்றி.
- ம. மீனாட்சிசுந்தரம்,சென்னை.