

சமத்துவம், மதச்சார்பின்மை போன்ற சொற்கள் அரசியல் சட்டத்தின் முகவுரையிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் பேசியிருப்பதை எப்படி ஏற்றுக்கொள்வது? பாஜக அரசு மெல்ல மெல்லத் தன் சுயரூபத்தை வெளிப்படுத்துகிறது.
பன்மைத்தன்மைதான் இதுவரை நம் ஒற்றுமையைக் கட்டிக்காத்துவருகிறது. பெரும்பான்மை பலத்தைக் கொண்டு இதைச் சாதித்துவிடலாம் என்று எண்ணுகிறார்கள் போலும். இவற்றை நீக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. மற்ற அரசியல் கட்சிகள் எல்லாம் ஒருமித்த குரலில் இதை எதிர்க்க வேண்டும்.
- ரா. பொன்முத்தையா,தூத்துக்குடி.
***
சமத்துவமும் மதச்சார்பின்மையும் சாதாரண சொற்கள் அல்ல. அவைதான் நமது உயிர். மத்திய அமைச்சர் பதவி ஏற்றபோது நமது அரசியல் சாசனத்தின் மீது சத்தியம் செய்துதான் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பொறுப்பெற்றுள்ளார் என்பதை மறந்துவிடக் கூடாது.
ஆனால், நமது பாரதப் பிரதமரும் இதைக் கண்டிக்காமல் இருப்பது கவலையைத் தருகிறது. அரசியல் லாபத்துக்காகச் சில அரசியல் கட்சிகள், சிறுபான்மை சமூகத்துக்குக் குரல்கொடுக்கிறேன் என்றும், சில கட்சிகள் பெரும்பான்மைச் சமூகத்துக்குக் குரல்கொடுக்கிறேன் என்றும் இந்தியர்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்திவருகிறார்கள். அரசியல் தலைவர்களே… இந்திய மக்களை இந்தியர்களாக வாழ விடுங்கள்!
- பா. தங்கராஜ், திப்பணம்பட்டி
***
மொகலாயர்கள் மற்றும் வெள்ளையர்கள் வருகைக்கு முன்னரே நம் இந்தியாவில் சைவம், வைணவம், சமணம், பெளத்தம் எனப் பல சமயங்கள் இருந்துள்ளன. சீக்கிய மதம் பின்னர் தோன்றியது.
சைவம், வைணவம், போக சாக்தம், காணாபத்யம், கௌமாரம் என்று பல மதங்களின் பட்டியல் நீளும். பின்னாளில்தான் இங்குள்ள ஆறு மதங்களை இணைத்து ஷண்மத ஸ்தாபனம் என்று நிறுவி, அதை இந்து மதம் என்றார்கள். இவை போக, நம் நாட்டில் சிறுதெய்வ வழிபாடுகள் பல அந்தந்தப் பகுதிகளில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
மொழிகள், இனங்கள், இறை நம்பிக்கை முதலியவற்றில் பெரும் வேற்றுமைகளைத் தன்னகத்தே கொண்ட இந்தியா, ஒற்றுமையாகச் செயல்படுவதுதான் அதன் பெருமை. கடவுளே இல்லை என்று பேசும் நாத்திகரையும் தன்னகத்தே கொண்டுள்ளது. 8-ம் நூற்றாண்டிலேயே ‘நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர்’ என்று மாணிக்கவாசகர் கூறியுள்ளார். எனவே, சமத்துவத்தையும் மதச்சார்பின்மையையும் எடுப்பது என்பது தேன்கூட்டைக் கலைப்பதற்குச் சமம்.
- இரா. தீத்தாரப்பன்,தென்காசி.