ஆவணத் திருடர்கள்

ஆவணத் திருடர்கள்
Updated on
1 min read

பெருநிறுவனங்கள் தங்கள் சுய லாபத்துக்காக அரசையும் அரசு ஊழியர்களையும் பயன்படுத்திக்கொள்கின்றன என்பதற்கான ஆதாரமே, பி.ஏ. கிருஷ்ணன் எழுதிய ‘நாடகத்தின் முன்னோட்டமா ஆவணத் திருட்டு?' கட்டுரை.

அரசு இயந்திரத்தில் பணிபுரியும் சிலர் பெருநிறுவனங்கள் தூக்கி வீசும் எலும்புத் துண்டுகளுக்காக வாலாட்டுவதே இதற்கெல்லாம் அடிப்படை. இப்படிப்பட்ட ஆவணத் திருடர்களைத் தயவுதாட்சண்யமின்றித் தண்டிக்க வேண்டும்.

முகேஷ் அம்பானி காங்கிரஸை ‘நம்ம கடை’ என்றால், இன்று அதானி அதே வார்த்தையைச் சொல்லக் கூடும். அதிகாரிகளின் துணை இல்லாமல் ஆவணங்களைத் திருட வாய்ப்பே இல்லை.

- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்,வேம்பார்.

***

ஆவணத் திருட்டு சம்பவத்தில் சிக்கியிருப்பவர்கள் சிலர் மட்டும்தான். எந்த ஊழலிலும் முறைகேட்டிலும் சின்ன மீன்கள்தான் சிக்குகின்றன; சுறாக்கள் தப்பிவிடுகின்றன எனக் குறிப்பிட்டிருக்கும் தலையங்கம் முற்றிலும் உண்மை. அரசின் ரகசியத்தை அறிய முற்படும் நிறுவனங்களுக்கு அது, மக்களின் பணத்தைச் சுரண்டுவதற்கே உதவுகிறது. மத்திய அரசு அலுவலகங்களில் ஒட்டுக்கேட்புக் கருவிகள் பொருத்துவதும், ராணுவ ரகசியங்களை அறிவதும், அமைச்சர்களை முதலாளிகள் பின்புலத்திலிருந்து இயக்குவதும், நாட்டின் இறையாண்மைக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய சவாலாகும். இந்த விஷயத்தில் அரசு மெத்தனமாக இருந்துவிடக் கூடாது. குற்றவாளிகளுக்குத் தண்டனையும் இனி குற்றம் நடைபெறாமல் இருப்பதற்கான செயல்பாடுகளும் மிக அவசரம், மிக அவசியம்.

- மா. கோவிந்தசாமி,தருமபுரி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in