

ராமச்சந்திர குஹா எழுதிய ‘அமித் ஷா எனும் அலாவுதீன் பூதம்’ கட்டுரையைப் படித்தேன்.
மத்தியில் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த தினத்திலிருந்து பல கட்டுரைகளை குஹா எழுதியிருக்கிறார், இந்த கட்டுரையிலும் பாரதிய ஜனதா கட்சியையும், மோடியையும் தனது பாணியில் விமர்சனம் செய்துள்ளார். இதே போன்ற விமர்சனங்களை காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் மீது வைத்தாரா என்பது தெரியவில்லை.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் பேசிய பேச்சைப் பற்றி விமர்சனம் செய்த கட்டுரையாளர், முலாயம் சிங் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேசியதை மட்டும் குறிப்பிடாமல் விமர்சனம் செய்திருக்கிறார். அல்லது ஆந்திராவில் உள்ள அசாதுதீன் ஒவாய்சியும் அவரது சகோதரரும் பேசிய பேச்சுபற்றிய விமர்சனத்தையும் முன்வைத்திருக்க வேண்டும். ஆகவே, ராமச்சந்திர குஹா பாரதிய ஜனதா கட்சியை விமர்சனம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதிய கட்டுரையாகவே தெரிகிறது.
- ஆ. சரவணன்,ஈரோடு.
***
கட்டுரையாளர் ராமச்சந்திர குஹா எழுதிய ‘அமித் ஷா எனும் அலாவுதீன் பூதம்’ கட்டுரை மிக முக்கியமான பதிவு. இவர் போன்ற தலைவர்கள் நம் நாட்டில் பலர் இருக்கிறார்கள்.
பதவிக்கு வந்த பிறகோ அல்லது அதிகாரம் கையில் வந்த பிறகோ எல்லாமே மறைக்கப்பட்டு அவர்கள் புனிதர்களாகப் போற்றப்படுகிறார்கள். இன்று நேற்றல்ல பல காலமாக நடந்துவருகிறது. சட்டமும் தண்டனையும் சாமானியர்களுக்குத்தான், அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் கிடையாது.
- வசந்தன்,மின்னஞ்சல் வழியாக…