

புத்தகக் காட்சி ஆரம்பித்ததிலிருந்து, எந்த எழுத்தாளர் எந்த புத்தகத்தை வாங்கினார் என்பதை வெளியிட்டு, எங்கள் ஏக்கத்தை அதிகப்படுத்திக்கொண்டே இருக்கிறீர்கள்.
‘புத்தகம் படிக்க நேரம் இல்லையா?’ என்று கேட்டது ‘உங்களுக்கு வாழ நேரம் இல்லையா?’ என்று கேட்பதைப் போல் இருக்கிறது. என்னதான் நாம் இணையதளம் மூலம் பல விஷயங்களைப் பார்த்தாலும், அது நம் கற்பனை உலகத்தைச் சூன்யமாக்குவது உண்மையே.
ஆனால், புத்தகம் வாசிப்பதோ நம் மனதைப் பண்படுத்துகிறது. அதனால் வாசிப்பவர்களுக்கு நேசிப்பது சுலபமாகிவிடுகிறது. பின் வாழ்க்கையே சுலபமாகிவிடுகிறது என்பது நடைமுறை உண்மை. அதனால், நம் கரங்களை இறுகப் பற்றி, நம்மிடம் மௌன மொழியில் பேசி, நம்மை வேறோர் உலகுக்கு இதமாக அழைத்துச் செல்லும் புத்தகத்தை நம் உறவாக்கிக்கொள்வோம்.
இல்லையேல் நாம் வாழ்க்கையையே தவறவிட்டவர்களாவோம்.
- ஜே. லூர்து,மதுரை.
எதிர்கால நம்பிக்கை
'நான் என்னென்ன வாங்கினேன்?' என்று எழுத்தாளர் இமையம் சொல்லியுள்ளதை வரவேற்கிறேன். இமையம் ஏற்கெனவே ‘தி இந்து' வில் இன்றைய கல்வி முறை மற்றும் அதில் காணப்படும் குறைபாடுகள்குறித்து விரிவான பேட்டியளித்திருக்கிறார்.
இவரைப் போன்ற சிந்தனையுள்ள ஆசிரியர்கள் இருப்பதை அறிந்த பிறகுதான் நமது சந்ததியினரின் எதிர்காலம்குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது. இருந்தாலும், ஒட்டுமொத்த மாணவர்களும் பயன்பெற ஒரு இமையம் போதாது, ஓராயிரம் இமையங்கள் உருவாக வேண்டும்.
- ஜேவி,சென்னை.