

‘காலமும் கணக்கும்’ என்ற கட்டுரை (‘தி இந்து’, ஜன 13) பயனுள்ள தகவல்களைக் கொண்டுள்ளது. பூமி, சூரியனை ஒரு முறைச் சுற்ற எடுத்துக்கொள்ளும் காலமே ஆண்டாகும், அது 365 நாட்கள், 5 மணி, 48 நிமிடம் 46 வினாடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
365 நாட்களை ஒரு ஆண்டென்றால், ஏறக்குறைய கால் நாள் விடுபடுகின்றது. அதனால் நான்கு ஆண்டுகளில் ஒரு ஆண்டில் ஒரு நாள் நீட்டப்படுகின்றது. கால் நாளைவிடச் சிறிது குறைவாகவே இருப்பதால், அதை ஈடுகட்ட 400 ஆண்டுகளில் மூன்று லீப் வருடங்கள் நீக்கப்படுகின்றன.
1700, 1800, 1900 ஆகியவை நான்கால் வகுபட்டாலும் அவை லீப் வருடக் கணக்கில் சேர்க்கப்படாது, 400-ஆல் வகுபடும் 2000 லீப் வருடமாகும். இப்போதும் சிறிது குறை இருக்கும். அதைச் சரிசெய்யப் பல நூறு ஆண்டுகளுக்குப் பின் காலண்டரில் மாற்றம் கொண்டுவரப்படும்.
- ச.சீ. இராஜகோபாலன்,சென்னை.
***
காலண்டரும் வெள்ளப்பெருக்கும்
‘வெற்றிக்கொடி’ பகுதியில் ‘காலமும் கணக்கும்’ கட்டுரை மூலம் மாதங்கள் உருவான விதம்பற்றி அறிய முடிந்தது.
மனித வாழ்க்கையில் ஒன்றோடு ஒன்றாக இணைந்து ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி வீடுகளில் தனக்கென்று ஓரிடத்தை ஆக்கிரமித்துள்ளது காலண்டர்.
வரிக்கு வரி பொது அறிவுச் செய்திகள் கட்டுரைக்குள் பொதிந்துள்ளன. அதிலும் நைல் நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை வைத்து எகிப்தியர்கள் காலண்டரை உருவாக்கினார்கள் என்பது ஆச்சரியமாக இருந்தது. இந்தக் கட்டுரை, ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மிகவும் பயன் தரும் வகையில் அமைந்துள்ளது.
- மு.க. இப்ராஹிம்,வேம்பார்.