

மதுவென்றால் என்னவென்றே அறியாதிருந்த ஒரு சமுதாயத்தையும், மதுவில் மூழ்கித் தங்களது எதிர்காலத்தைத் தொலைத்த இளைய சமுதாயத்தையும் நம் வாழ்நாளிலேயே கண்டுவிட்டோம்.
மதுவிலக்கு அமலில் இருந்த தமிழகம் எப்படி அமைதிப்பூங்காவாக இருந்தது, மதுவிலக்கை விலக்கிக்கொண்ட பின் தமிழகம் எந்த வழிகளிலெல்லாம் சீரழிந்தது என்பதையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
இளைஞர்களும் இளம் பெண்களும் மதுவால் தங்கள் எதிர்காலத்தைச் சீரழித்துக்கொண்டிருப்பதை நினைத்துத் துடிக்காத உள்ளங்களே இல்லை. இதற்குத் தீர்வே கிடையாதா? மிக மோசமாக பாதிக்கப்பட்ட குடிநோயாளிகளும் மது அரக்கனின் கோரப் பிடியிலிருந்து விடுபட முடியாதா என்று சான்றோர்களும் கவலைப்பட்டுக்கொண்டிருக்கும்போது, ‘இதோ நாங்கள் இருக்கிறோம்’ என்று ஒரு அரசாங்கம் செய்யத் தவறிய ஒரு மாபெரும் பணியைத் தன் தலையில் சுமந்து, மதுவுக்கு எதிரான ஒரு பெரும் போரைத் தொடர்ந்து நடத்தி, அதில் குறிப்பிடத் தகுந்த வெற்றியும் பெற்றிருக்கிறது நமது ‘தி இந்து’ நாளிதழ்.
‘தி இந்து’வின் தொடர் முழக்கக் கட்டுரைகள், மக்கள் மனங்களையும் நீதிமன்றத்தின் கதவுகளையும் தட்டியதோடு, நீதிபதிகளையும் மதுவுக்கு எதிரான கேள்விகளை அரசைப் பார்த்துக் கேட்கும்படி வைத்துவிட்டது என்பதையும் யாரும் மறுக்க முடியாது. மதுவுக்கு எதிரான நமது யுத்தம் தொடரட்டும்.
- கே.பி.எச். முகம்மது முஸ்தபா,திருநெல்வேலி.