

தலிபான்கள் கொலைவெறி கொண்டு ஒன்றும் அறியாத குழந்தைகளையும் கொலைசெய்த இழிசெயலால் தங்களைக் காட்டுமிராண்டிகள் என்று உறுதிசெய்துள்ளனர்.
குழந்தைகளைக் கடவுளின் பெயரால், துடிக்கத் துடிக்கக் கொன்றது மனிதநேயமற்ற செயல். அன்பைப் போதிக்கும் மதங்கள் எவையும் கொடூரச் செயல்களைச் செய்யச் சொல்லவில்லை. அதிக மத போதை கொண்டவன், அதிக அறிவற்றவன் என்பதை இக்கொடூர நிகழ்வு உறுதிப்படுத்துகிறது.
- விளதை சிவா,மின்னஞ்சல் வழியாக…
***
பாகிஸ்தானில் ஒரு பள்ளியில் புகுந்து 132 குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பது கோழைத்தனமே. இச்செயல் தலிபான்களிடம் சிறு பற்று வைத்திருப்பவரையும் அவர்களுக்கு எதிராகத் திருப்பிவிடும். மதத் தீவிரவாதத்தை எப்படி எதிர்கொள்வது என்று அறியாமல், டிரோன் தாக்குதல் மூலம் அப்பாவி மக்களைக் கொன்று ஒழித்துவிட முடியும் என்ற அமெரிக்காவின் அணுகுமுறை பயனற்றது என்பது மாத்திரமல்ல.
நேரான எதிர்விளைவுகளையே உண்டாக்கியிருக்கின்றன. போரின் வித்துகள், மனித மனத்தில் விதைக்கப்படுவதால் மனித மனத்தை மேம்படுத்துவதே தேவை என்று யுனெஸ்கோ சாசனம் தொடங்குகின்றது. இன்றைய தேவையும் அதுதான். அவ்வாறு அமைதியை நாடும் மனிதர்களாக மாற்றுவதே நிரந்தரத் தீர்வாகும். சர்வதேச அளவிலும் இந்திய நாட்டைப் பொறுத்தும் இக்கூற்று பொருந்து மாதலால் மோதல் போக்குகளைத் தவிர்த்து மனங்களைக் கொள்ளை கொள்ள முயற்சிக்க வேண்டும்.
- ச.சீ. இராஜகோபாலன்,சென்னை