

தங்கர் பச்சானின் ‘சொல்லத் தோணுது’ தொடரில் திருமணம் குறித்த பதிவு, இன்றைய திருமணங்களின் உண்மை நிலையை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது.
மாசக் கணக்கில் மஞ்சளிட்டு, மாமன் மச்சான் பந்தலிட்டு வாத்தியங்களின் இசையில் இனிக்க இனிக்க நடந்த திருமணங்கள், வெடிச் சத்தத்திலும் வேடிக்கைக் காட்சிகளிலும் காணாமல்போவதுகூடக் கலாச்சாரச் சீரழிவுதான். எளிமையாக நடக்கும் திருமணங்களை ஏளனமாகப் பார்க்கும் அளவுக்கு ஊர் மாறிபோனதுகூடச் சமூகத்தின் நியாயமற்ற மாற்றம்தான்.
குடும்ப விழாக்களில் கூடிப் பேசி மகிழ்ந்த நிலைமாறி, சடங்குக்காக எட்டிப்பார்த்துவிட்டு, வருகையைப் பதிவுசெய்யும் விழாவாகிப்போனது அவசர உலகத்தின் அதிசயம்தான். யார் மெச்ச வேண்டும் என்பதற்காக, ஜந்தாறு வருட உழைப்புப் பணத்தைச் செலவிட்டு இத்தனை ஆடம்பரங்கள்? தங்கள் இருப்பைக் காட்டிக்கொள்ளும் விழாவாக திருமணங்களை மாற்றுவது, இயல்பான சமூகத்தை வீழ்ச்சியடையச் செய்யும் விரயம் இல்லையா? அதுவல்ல! இரு குடும்ப நண்பர்களும் இரு குடும்பச் சொந்தங்களும் இணைந்து மகிழ்ந்து நடத்தும் எளிமையான இல்லற இணைப்பு விழாவே திருமண விழா.
- கூத்தப்பாடி மா. கோவிந்தசாமி,தருமபுரி.