

வெ. சந்திரமோகன் எழுதிய ‘சமூகநீதிக் காவலர்’ கட்டுரை படித்ததும் தோன்றியது இதுதான்:
‘தடம் பார்த்து நடப்பவன் மனிதன். தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்!’ வாழ்க்கை நெறியை வலுவாய்ப் பின்பற்றி, இடஒதுக்கீடு என்ற தடத்தினைப் பதித்துச் சென்ற வி.பி. சிங்கின் சாதனை அவ்வளவு எளிதானதல்ல. பெரும்பான்மையுடன் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசுகூடச் செய்யாத இடஒதுக்கீட்டை சிறுபான்மை அரசாக, தலைக்கு மேல் கத்தி தொங்கிய போதும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக மண்டல் கமிஷன் பரிந்துரையை மனநிறைவோடு நிறைவேற்றியவர். வட மாநிலங்கள் இடஒதுக்கீடு சம்பந்தமான பயங்கர போராட்டங்கள் நடந்தபோதும் தான் கொண்ட கொள்கையில் நிலையாய் நின்றவர் வி.பி. சிங். தன் கட்சித் தலைவர் ராஜீவ் காந்திக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து, காங்கிரஸை விட்டு நீக்கப்பட்ட போதும் சரி, அத்வானியின் ரத யாத்திரையால் இந்தியாவின் மதச் சார்பின்மை பாதிக்கப்படும் எனும்போது ரத யாத்திரையை நிறுத்தி ஆட்சியை இழந்தபோதும் சரி, தான் ஒரு கொள்கை வீரன் என்பதை நிரூபித்துக் காட்டிய சமூக நீதிக் காவலர் வி.பி. சிங்கிடம் இன்றைய அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் ஏராளம்.
- ச.கிறிஸ்து ஞான வள்ளுவன்,வேம்பார்.