

விடுதலைக்குப் பிறகு, நாடு சுயசார்போடு இருக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன், நாட்டின் அடிப்படைக் கட்டுமானத்தை வலுவாக உருவாக்க அப்போதைய பிரதமர் நேரு எடுத்த முடிவின் அடிப்படையிலேயே பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. ‘நவ இந்தியாவின் திருக்கோயில்கள்' என்று அவர் கொண்டாடிய பொதுத் துறைகளைச் சீரழிக்கும் அனைத்து முயற்சிகளையும் ஆட்சியில் அமர்கின்ற அரசுகள் எடுத்துவருகின்றன. மக்களின் சேமிப்பைத் திரட்டி அவர்களுக்கே அது பயன்படும் வகையில் அரசின் ஐந்தாண்டுத் திட்டங்களுக்கு அதனை எல்.ஐ.சி வழங்கிவருகிறது. இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதன் மூலம், அந்நிய நிறுவனங்கள் மக்களின் சேமிப்பைக் கொள்ளையடித்துச் செல்ல அரசே வழிவகை செய்கிறது. லாபத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு, நாடு விட்டு நாடு பறக்கும் நிதி மூலதனத்தை தோழர் சுவாமிநாதன் மிகச் சரியாக ‘வண்ணத்துப்பூச்சி மூலதனம்' என்று குறிப்பிட்டுள்ளார். அந்நிய நிறுவனங்களின் நலனைப் பார்ப்பதை விட்டுவிட்டு, நாட்டுமக்களின் நலன் மற்றும் பொருளாதார இறையாண் மையைக் காக்க அரசு முயற்சி எடுக்க வேண்டும்.
சி. கிருத்திகா,மின்னஞ்சல் வழியாக…