நோக்கியாவால் வளர்ச்சி அல்ல, நெருக்கடி மட்டுமே
‘தொழிலாளர்களைக் கைவிட்டது நோக்கியாவா, இந்தியாவா?’ என்கிற கட்டுரை படித்தேன். பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க மத்திய, மாநில அரசுகள் அந்நிறுவனங்களுக்கு வரிச் சலுகை உட்பட ஏராளமான சலுகைகளை வாரி வழங்குகின்றன. ஆனால், பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியத் தொழிலாளர்களின் உழைப்பையும் செல்வ வளத்தையும் சுரண்டுவதில்தான் குறியாக உள்ளன. இந்திய அரசு, நோக்கியா தொழிலாளர்களைக் காப்பாற்றாது. ஏனென்றால், இந்திய அரசு பன்னாட்டு நிறுவனங்களின் தோழனாகத்தான் செயல்படுகிறது.
புதிய தாராளமயக் கொள்கைகள் உலகில் எந்த ஒரு நாட்டையும் வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச்செல்லவில்லை என்பதே உலக அனுபவம். ஏகாதிபத்திய புதிய தாராளமயக் கொள்கைகள் நாட்டுக்கு நெருக்கடியையே கொண்டுவரும்; வளர்ச்சியை அல்ல. தொழிலாளி வர்க்கம் 8 மணி நேர வேலை நாளை வென்றெடுக்க, ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஒழித்து நிரந்தர வேலைவாய்ப்பை உருவாக்கவும், தொழிற்சங்க உரிமைகளை வென்றெடுக்கவும் குறைந்த கூலியில் நமது உழைப்பைச் சூறையாடப்படுவதைத் தடுத்து நிறுத்தவும் புதிய தாராளமயக் கொள்கைகளையும், அமெரிக்காவின் மேலாதிக்கத்துக்கு சேவை செய்யும் கொள்கைகளையும் திரும்பப் பெறுவதன் மூலம் மட்டுமே சாதிக்க முடியும்.
- மா. சேரலாதன்,தர்மபுரி.
