இப்படிக்கு இவர்கள்: மாநில உணர்வு

இப்படிக்கு இவர்கள்: மாநில உணர்வு
Updated on
2 min read

கூட்டாட்சித் தத்துவம், ஒன்றிய இணைப்பு ஆட்சி என்ற தடத்தில் இருந்து சற்றி விலகிப்பயணிக்கும் பிள்ளையாகத் தன்னைக் காட்டிக்கொள்கிறது மத்திய அரசு (‘மாநிலங்களின் நிதி உரிமைகளுக்கு மங்கலம் பாடிய ஜிஎஸ்டி’, ஆக.17). வரி விதிப்பதில் தங்களுக்கு இருந்த அதிகாரத்தை மாநிலங்கள் தாமாகவே முன்வந்து விட்டுக்கொடுத்துவிட்டாக கூறுகிறார் மோடி. இது திபெத்தை ஆக்கிரமித்த சீனா, தாமாக முன்வந்து திபெத்தியர்கள் தங்களை சீனாவுடன் இணைந்துக்கொண்டதாக கூறியதற்கு ஒப்பானது.

ஒற்றையாட்சியை தீவிரப்படுத்தும்போது, சில விலகல் குரல்கள் எழும் என்பதை கர்நாடகாவின் தனிக்கொடி கோரிக்கை, தனி நாடு கேட்கும் வடகிழக்கு மாகாணங்கள் போன்றவை உணர்த்துகின்றன. மாநிலங்களின் உணர்வைப் புரிந்துகொண்டு மத்திய அரசு ஆட்சி நடத்தாவிட்டால், நாட்டின் ஒற்றுமைக்கே பாதகமாகிவிடும்.

-சி.செல்வராஜ், புலிவலம்.

மக்களின் தண்டனை

மனச்சாட்சியை உலுக்கியது, ‘குழந்தைகள் மரணத்தில் உங்களுக்கும் பொறுப்பில்லையா?’ (ஆக.16) கட்டுரை. குழந்தைகளின் உயிரோடு விளையாடிய உத்திரபிரதேச அரசும், உயிர்காக்கும் ஆக்ஸிஜன் பெறவும் கமிஷனை எதிர்நோக்கும் கயமையைச் செய்தவர்களும் வெட்கித்தலைகுனிய வேண்டும். இன்றும் எத்தனை ஆண்டுகளானாலும், குழந்தையைப் பறிகொடுத்த பெற்றோர்களின் கண்ணீரின் சூடு தணியாது.

தமிழகத்தில் டெங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் மெத்தனமாக இருப்பதையும் கவலையோடு பார்க்க வேண்டியதிருக்கிறது. மக்கள் ஓட்டளிக்கும் கைகளை மட்டும் கொண்டிருக்கவில்லை. தக்க சமயத்தில் அரசுகளையே தண்டிக்கும் மனவலிமையையும் பெற்றிருக்கிறார்கள் என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்து செயல்படுவது நல்லது.

-கோ.தமிழரசன், செஞ்சி.

எம்ஜிஆர் வீடு

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் தருணத்தில், ‘சிதிலமடையுதே எம்ஜிஆர் பிறந்த வீடு’ எனும் செய்தி (ஆக.16), அவரது உண்மையான ரசிகர்களையும், தொண்டர்களையும் வேதனை அடையச் செய்தது. அவரது வழிவந்தாகச் சொல்லிக்கொண்டு ஆள்பவர்கள், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை வெறுமனே அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ரத்தத்தின் ரத்தங்கள் தானே என்ற உணர்வே இல்லாமல், சொந்தக்கட்சியினரையே மோசமாக விமர்சிக்கிறார்கள். விழா என்ற பெயரில் லட்சக்கணக்கில் பணத்தைச் செலவிடுபவர்கள், வடவனூரில் உள்ள எம்ஜிஆர் பிறந்த இல்லத்தை சீரமைக்க முன்வர வேண்டும். அதுவே அவருக்குச் செய்கிற நூற்றாண்டு விழா காணிக்கையாக இருக்கும்.

-எஸ்.ராஜகணேஷ், தலைஞாயிறு.

மறக்க முடியுமா?

இந்திய அரசியலமைப்புச் சட்ட அவையில், 14.8.1947-ல் ஜவாஹர்லால் நேரு ஆற்றிய உரையை, ‘சமாதானம், சுதந்திரம், ஜனநாயகம் காப்போம்!’ என்ற தலைப்பில் வாசித்தபோது அழுதேவிட்டேன். குறிப்பாக, “இந்தியாவுக்கு, நம்முடைய பாசமிக்க தாய்நாட்டுக்கு, காலம் காலமாக இளமையோடு திகழும் நாட்டுக்கு, நாம் நமது சிறந்தாழ்ந்த அஞ்சலியை இந்நேரத்தில் செலுத்துவோம். இந்த தேசத்தின் சேவைக்காக நாம் நம்மை மீண்டும் பிணைத்துக்கொள்வோம். ஜெய்ஹிந்த்” என்று கூறியதை வாசித்தபோது நெகிழ்ச்சியாக இருந்தது. எண்ணங்களிலும் செயல்களிலும் குறுகிய புத்தி உள்ள மக்களைக் கொண்ட எந்த நாடும் வலிமையான நாடாக வளர முடியாது என்றும், உலகில் சமாதானம், சுதந்திரம், ஜனநாயகம் வலுப்பட நாம் ஒத்துழைப்போம் என்றும் அவர் அன்று கூறியது இன்றும் பொருந்தும். மறக்க முடியாத தலைவர் நேரு.

-சீனி.சுப்பையா, ச.கருப்பூர், கும்பகோணம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in