

காலத்தின் கட்டாயம்!
‘செம்மொழி நிறுவனம்: மாநில அரசுக்குப் பொறுப்பில்லையா?’ (ஜூலை 13) கட்டுரை படித்ததும், எதற்கும் பொறுப்பேற்காமல் தட்டிக் கழிக்க நினைக்கும் தமிழக அரசு, வெறுப்பாக செம்மொழியைப் பார்க்கும் மத்திய அரசோடு கைகோத்துக் கொண்டுவிட்டதோ என்று எண்ணத் தோன்றியது. இந்தி, சம்ஸ்கிருதம் தவிர்த்த மற்ற மொழிகளை மாற்றாந்தாய் பிள்ளைகளாக மத்திய அரசு கருதுகிறது. தமிழ் மட்டுமின்றி மற்ற செம்மொழிகளுக்கும் இதே நிலைதானோ? பல்வேறு துறைகளில் இருக்கிற தமிழ் ஆர்வலர்கள் அத்தனை பேரும் காலந்தாழ்த்தாமல் ஒன்றுகூடி, செம்மொழி நிறுவனத்தின் ஆட்சிக் குழுத் தலைவரான தமிழக முதல்வரைச் சந்திக்க வேண்டும். தன்னாட்சி செம்மொழி நிறுவனத்தை ஒரு பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டுசென்றால், அதனால் பின்னர் ஏற்படும் மோசமான விளைவைப் பற்றி அவரிடம் எடுத்துரைக்க வேண்டிய அவசரத் தருணமிது.
- சாமி குணசேகர், அம்மாசத்திரம்.
அன்புப் பூச்செண்டு!
நூல்வெளியில் ‘பொதிகைச் சித்தரின் போர்ப்பறை’ கட்டுரை பொதியவெற்பனின் பன்முகத் தன்மையையும், அவரின் இலக்கியக் களமாடல்களையும் செவ்வனே நிரல்படுத்தியுள்ளது. குடந்தையில் அவரின் அதிதீவிர இயக்க முன்னெடுப்புகள், தனித்தமிழ்ச் செயல்பாடுகள் பற்றியும் இங்கே நினைவூட்ட விரும்புகிறேன். ‘சுகன்’ இதழில் தஞ்சைப்ரகாஷ், பொதிகைச் சித்தர் இருவரும் தொடர்ந்து நடத்திய எதிர்வினைப் போர்கள் தமிழிலக்கியம், சைவசித்தாந்தம், தத்துவவியல் போன்றவற்றை அலசிய ஆய்வுக்களங்கள் எல்லாம் அறிவுப் புதையல்கள்.
- வெற்றிப்பேரொளி, சென்னை.
ஒளவையாரின் வயது என்ன?
தமிழ்ப் புலவர்களில் ஒளவையார் என்ற பெயருடையவர் மூவர் என்பர். சங்க கால ஒளவையாரே பிரபலம். அதியமான் இறந்தபோது அவரது இரு மகள்களுக்கும் திருமணமாகவில்லை. எனவே, அவர்கள் வயது 18-க்கும் குறைவாக இருந்திருக்கும். அதியமான் வயதும் 50-க்குள் இருக்க வேண்டும். அதியமானின் நண்பர் எனும் முறையில் ஒளவையாருக்கும் அந்த வயதுதான் இருக்க வேண்டும். ஏன் அவர் ஒரு கிழவியாக ஆக்கப்பட்டார். ஜெமினி சினிமா நிறுவனத்தினர் எந்த அடிப்படையில் சினிமாப் பட ஒளவையாருக்கு, கே.பி.சுந்தராம்பாளைத் தேர்ந்தெடுத்தனர்? மேல்நாடுகள்போல் ஆழமாக ஆய்வுகள் நடத்தப்பெற்று ஒளவையின் வயதும் தோற்றமும் காணப்பட வேண்டும்.
- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.
இரு பெரும் ஆளுமைகள்
ஜூலை 14 அன்று நடுப்பக்கத்தில் காமராஜர், என்.சங்கரய்யா ஆகிய இரு பெருந்தலைவர்கள் குறித் துக் கட்டுரைகளை வெளியிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. சுதந்திரப் போராட்டத்தின்போது எட்டு ஆண்டுகள் காலம் சங்கரய்யா சிறையில் இருந்ததை இதுவரை இந்திய வரலாறு மக்களுக்குச் சொல்லியதில்லை. ‘தி இந்து’ அதைச் செய்திருக்கிறது. அதேபோல, அப்பழுக்கற்ற மக்கள் தலைவர் காமராஜர் மற்றும் கக்கன் போன்றவர்கள் இந்நாட்டுக்கு காங்கிரஸ் அளித்த கொடை. ஆனால், அதன் பிறகு அக்கட்சியில் அத்தகைய தலைவர்கள் அரிதாகிவிட்டது வருத்தமளிக்கிறது.
- பெரணமல்லூர் சேகரன், சென்னை.
குழந்தைகளின் எதிர்காலம்
வே.வசந்தி தேவியின் ‘குழந்தைகளை மிரட்டும் மஞ்சள் வாகனங்கள்’ (ஜூலை 10) கட்டுரையைப் படித்தபோது தனியார் பள்ளிகளுக்கு நாம் எவ்வளவு அடிமைப்பட்டுக் கிடக்கிறோம் என்று தெளிவாகப் புரிந்தது. காலையில் புத்தகச் சுமையோடு மஞ்சள் வாகனங்களில் ஏறும் ஒரு குழந்தை சாப்பிட்டிருக்குமா? காலைக் கடன்களை முடித்திருக்குமா? என்பதைப் பற்றியெல்லாம் எந்தக் கவலையும் நமக்கில்லை. உடல்நலத்துடன், ஒவ்வொரு குழந்தையின் தனிப்பட்ட ஆளுமைத் திறனையும் சத்தமில்லாமல் அழித்துக்கொண்டிருக்கிறோம். இதுபற்றியும், அரசுப் பள்ளியின் கட்டமைப்பைச் சீர்செய்யாமல், பெற்றோர்களை அரசுப் பள்ளியின் பக்கம் திருப்புவது கடினம் என்பதையும் எழுதியிருக்கிறார் கட்டுரையாளர்.
- அருள் முருகன், மின்னஞ்சல் வழியாக.