

மனஷ் ஃபிராக் பட்டாச்சார்ஜீயின் ‘கும்பலாட்சி’ கட்டுரை (ஜூன் - 29) மனித சமூகத்தின் மனசாட்சியை உலுக்கக்கூடியது. “இந்தியா தேசிய இனங்களின் மிகப்பெரிய சிறைக்கூடம்” என்றார் கவிஞர் இன்குலாப். ஆனால், பாஜக ஆட்சியில், இந்தியா மனித உரிமைகளின் சிறைக்கூடமாக மாறிவருகிறது. பன்மைத்துவம் என்றும், வேற்றுமையில் ஒற்றுமை என்றும் மார்தட்டிக்கொள்கிற ஒரு தேசம் தனது ஆட்சிப் பரப்பில் நிகழ்த்தப்படுகிற சட்டமீறல்களையும், சகிப்பின்மை சதிராட்டங்களையும் ஊக்கப்படுத்துவதுபோல் கண்டும் காணாமல் இருப்பது மிகவும் கொடுமையானது.
- நா.ராசாரகுநாதன், தமிழ் கலை இலக்கியப் பேரவை.
பதிப்புத் துறையின் கடமை!
ஜூலை 1-ம் தேதி வெளியான, ‘பல்கலைக்கழகங்களின் பதிப்புத் துறை புத்துயிர் பெற வேண்டும்’ என்ற தலையங்கம் மிகுந்த கவனத்துக்கு உரியது. ஆய்வாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. அதேநேரத்தில், ஆய்வுகளின் தரம், பதிப்புத் துறை உட்பட பல்கலைக்கழகங்கள் கவனம் செலுத்த வேண்டிய பணிகள் குறைந்துவருவது நகைமுரண். லாப நட்டம் பாராமல், சமூக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நூல்களைப் பதிப்பித்தலும் அதனை மக்களிடம் கொண்டுசேர்த்தலும் ஆராய்ச்சி நிறுவனங்களின் முக்கியக் கடமைகளுள் ஒன்று. மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, பல்கலைக்கழகங்களில் பல தவறுகள் நிகழ்கின்றன. இனியேனும் தனது கடமையை உணர்ந்து அவை செயல்படத் தொடங்க வேண்டும்.
- பேரா.நா.மணி, ஈரோடு.
மகுடம் சூடுமா தமிழகம்?
மதுரையில் தொடங்கிய முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய பலரும், எம்.ஜி.ஆர். தான் நடித்த 137 திரைப்படங்களில் ஒன்றில்கூட புகைபிடிப்பது போன்றோ, மது அருந்துவது போன்றோ நடிக்க மறுத்தவர் என்று புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளனர். ஒரு தலைமைக்கான தார்மீகப் பொறுப்பைச் சுமந்த எம்.ஜி.ஆரின் வழியில் நடப்பதாகக் கூறும் தமிழக அரசு, டாஸ்மாக் கடையை நடத்துவது முரணானது. எனவே, தமிழ்நாடு முழுக்க மது எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் உள்ளிட்ட பல்வேறு மக்களின் மீதான வழக்குகளை நீக்கி, அவர்கள் முன்வைத்த மதுவிலக்கை அமல்படுத்துவது ஒன்றே அந்தத் தலைவருக்குச் சூடும் மகுடமாக இருக்கும். செய்யுமா அரசு?
- துளிர், மதுரை.
அரசாங்கம் இதனையும் கவனிக்குமா?
ஜூன்-29-ல் வெளியான கருத்துச் சித்திரம், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மட்டுமில்லாமல், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ஆட்சியர்கள், அரசு மருத்துவர்கள் உட்பட, அரசின் அனைத்துத் துறை ஊழியர்களும் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியது. பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் மக்களின் அடிப்படைத் தேவையான கல்வியையும், மருத்துவத்தையும் அரசுடமை ஆக்கும்போது, பல கோடி மக்கள் இன்னமும் வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள நம் நாட்டில் அதனைச் செயல்படுத்தலாமே? தனியார் மயம், ஒரே வரி என்று எதற்கெடுத்தாலும் மேலைநாடுகளை மேற்கோள் காட்டுகிற அரசாங்கம், இதனையும் கவனிக்குமா?
- ச.மீனாட்சி சுந்தரம், புதுச்சேரி.
பெரிதும் உதவும் நல்லுறவு
அரசுப் பள்ளிகளும், அவற்றின் ஆசிரியர்களும் நீதிமன்றங்களாலும், ஊடகங்களாலும் கடும் விமர்சனங்களுக்கு உட்பட்டு வரும் தருணத்தில், நற்பணி ஆற்றிவரும் அரசுப் பள்ளிகளை முன்னிறுத்தி ‘தி இந்து’ வெளியிடும் செய்திகள் ஆறுதல் அளிக்கின்றன. அரசுப் பள்ளிகளைச் சாடுவோர் பலரும் ஒரு பள்ளிக்கும் சென்று பார்க்காது தெரிவிக்கும் கருத்தேயாகும்.
வெளிநாடுகளில் பெற்றோரும் பொதுமக்களும் வகுப்பறைகளுக்குச் செல்லத் தடையேதுமில்லை. ஆசிரியர்களும் பெற்றோர் வருகையை வரவேற்பர். பள்ளிகளுக்கும் சமூகத்துக்கும் இடையே புரிதலும் நல்லுறவும் இருப்பது குழந்தைகளின் கற்றலுக்குப் பெரிதும் உதவும்.
- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.