நீதியின் பாதையில் கிருஷ்ணய்யர்

நீதியின் பாதையில் கிருஷ்ணய்யர்
Updated on
1 min read

நூறு வயதிலும் தூய்மையான நதியைப் போல் உற்சாகமாய் ஓடிக்கொண்டிருக்கும் நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யரைப் போன்ற ஒரு சிலரைப் பார்க்கும்போது, நீதியின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கை வருகிறது. மாணவப் பருவத்தில் தன்னைப் பெரிதும் பாதித்த காந்தியின் வழியைத் தன் வாழ்வியல் ஒழுக்கநெறியாய் ஏற்று, அதிலிருந்து இம்மியும் பிசகாமல் வாழ்ந்துவரும் நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யரைப் போன்று இளையோர் உருவாக வேண்டும்.

தன் ஊதியத்தை ஏழைகளுக்காகவும் ஆதரவற்றோருக்காகவும் தந்து நேர்மையின் அடையாளமாகத் திகழும் நீதியரசர், தன் வாழ்க்கையில் பல்லாயிரம் மனிதர்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். இந்தியப் பண்பாட்டை உயர்வாகக் கருதியவர். சமூக முன்னேற்றத்துக்கான தூண்டுதலை இந்த நூறு வயதிலும் எழுத்தின்மூலமாகவும் பேச்சின்மூலமாகவும் துணிச்சலாக வெளிப்படுத்திவரும் நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் நல்ல வழிகாட்டி என்பதையும் தாண்டி நம்பிக்கைக்குரிய வாழ்ந்துகாட்டியும்கூட.

- முனைவர் சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி.

இந்திய சட்ட விதிமுறைகளை மதிக்காத அதிகாரிகள், தான் படித்த சட்டத்தைத் தவறாக வளைக்கும் சட்ட வல்லுநர்கள், தங்களுக்காக மட்டுமே வாழும் அரசியல்வாதிகள், இந்தக் கால இளைஞர்கள் என்று யாருமே உண்மையான நீதியரசராக வாழ்ந்த கிருஷ்ணய்யர் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை.

இங்குள்ள காவல்நிலையங்களில் நடக்கும் விதிமீறல்களை எந்த உள்துறை அமைச்சராவது நேரில் சென்று விசாரணை நடத்தியதுண்டா? சிறைச்சாலையில் நடக்கும் சீர்கேடுகளை தினசரி நாளேடுகளில் இன்றளவும் காண முடிகிறது.

நெருக்கடி நிலை காலத்திலும், இந்திரா காந்தியின் தவறைச் சுட்டிக்காட்டிய தைரியம் இவரது நேர்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு. தவறு என்று தெரிந்தால் உடனடியாகத் தலையிட்டுத் தீர்வு காணும் தைரியம், இவரது நண்பர் ராஜாஜியே வியந்தது அவரது பேச்சிலேயே தெரிகிறது. மேலைநாடுகளிலும் இவரது தீர்ப்புகள் வரவேற்பைப் பெற்றது வியப்பில்லை.

- ஏ. அப்துல் ரஹீம்,காரைக்குடி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in