இப்படிக்கு இவர்கள்: அருகமைப் பள்ளியே தீர்வு

இப்படிக்கு இவர்கள்: அருகமைப் பள்ளியே தீர்வு
Updated on
2 min read

ஜூலை 10 அன்று வெளியான ‘குழந்தைகளை மிரட்டும் மஞ்சள் வாகனங்கள்’ எனும் கட்டுரை மிக முக்கியமானது. தனியார் பள்ளி தொடங்க விண்ணப்பிக்கும் போதே அதன் நோக்கத்தைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்று தனியார் பள்ளிகள் அங்கீகாரத்திற்கான சட்டம் 1974 குறிப்பிடுகிறது. “இதன்மூலம் குறிப்பிட்ட பகுதியில் வாழும் குழந்தைகளுக்கு கல்வி அளிக்கப்போகிறோம்.

அந்தக் குழந்தைகளுக்கு கல்விக்கு வேறு வழியில்லை” என்று பொய்யான காரணத்தைக் கூறி அனுமதி பெறுகிறார்கள். அரசோ, அப்பள்ளிக்கான மாணவர் சேர்க்கைப் பகுதி எல்லையை வரையறுக்காமல் அங்கீகாரம் வழங்குகிறது. இதனால்தான், இந்தக் கட்டுரையில் கல்வியாளர் வசந்திதேவி குறிப்பிடுவதுபோல, எவ்வளவு தொலைவில் இருந்தும் மஞ்சள் வாகனங்கள் மூலம் குழந்தைகள் அழைத்து வரப்படுகிறார்கள். கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் மட்டும் ஈடுபடவேண்டிய பள்ளிகள், வாகனங்கள் இயக்கும் வேலையைச் செய்வதே விதிமீறல்தான்.

இந்தியாவில் நாளொன்றுக்கு ஒரு குழந்தையாவது பள்ளி வாகன விபத்தில் இறக்கிறது, ஐந்து குழந்தைகள் காயமடைகின்றன. பிரிட்டன் போன்ற நாடுகள் பள்ளிக்கு நடந்து செல்வது, மிதிவண்டியில் செல்வது போன்ற திட்டங்களை ஊக்குவித்துவருகின்றன. தமிழக அரசும் அருகமைப் பள்ளி முறையைக் கல்விக் கொள்கையாக அறிவிப்பதுடன், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இதேபோன்ற நடைமுறையை உருவாக்க வேண்டும்.

-சு.மூர்த்தி, ஒருங்கிணைப்பாளர், கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு.

மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடித்துக் கைதாகும் வெளிநாட்டு மீனவர்களுக்கு 2 முதல் 20 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கும் வகையில் அந்நாட்டு அரசு சட்டம் கொண்டுவந்துள்ளது. இது முழுக்க முழுக்க இந்திய மீனவர்களைக் குறிவைத்துக் கொண்டுவரப்பட்ட சட்டம். எனவே இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு, பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். கச்சத்தீவையும் தாரை வார்த்துவிட்டு, அந்தப் பகுதியில் மீன்பிடித்தால் அபராதமும் செலுத்த வேண்டும் என்றால் என்ன நியாயம்?

-முனியசாமி, பாம்பன்.

முதல் தலித் சுயசரிதை

ஞாயிறு அரங்கில் வெளியான, ‘இரட்டைமலை சீனிவாசன்: ஆதிக்க எதிர்ப்பின் ஆதி தலைவர்!’ கட்டுரை நாங்கள் அறியாத பல தகவல்களைக் கொண்டிருந்தது. தலித் வரலாற்றின் இருபெரும் ஆளுமைகளான அயோத்திதாச பண்டிதருக்கும், இரட்டைமலை சீனிவாசனுக்கும் அரசியல் பயிலகமாகவே நீலகிரி விளங்கியது என்பதும், 1939-ல் இரட்டைமலை சீனிவாசன் எழுதிய ‘ஜீவிய சரித்திரச் சுருக்கம்’ நூல்தான் தமிழில் வெளியான முதல் தலித் சுயசரிதை என்பதும் அதற்கு உதாரணங்கள்.

-க.சந்திரமோகன், மின்னஞ்சல் வழியாக.

காதில் வாங்கவே மாட்டார்கள்...

இந்தி குறித்த ஐஸ்வர்யாவின் பேட்டியைப் படித்தேன். வட இந்தியாவில் 40 ஆண்டுகள் பணியாற்றியபோது இதுபற்றி பல முறை எனது எதிர்ப்பை அலுவலகத்திலும், பொது வெளியிலும் கூறிவந்தேன்.ஏன், இந்தியில் பேசிக் கூட இதை வலியுறுத்தினேன். ஏதோ காதில் வாங்கிக்கொள்வார்களே தவிர பொருட்படுத்துவது இல்லை. மத்திய அரசு அலுவலகங்களில் இந்தியில் கையெழுத்து போடச் சொல்வார்கள். மறுத்துவிட்டுத் தமிழிலேயே ஒப்பம் இட்டவன் நான். நான் தமிழில் ஒப்பமிட ஆரம்பித்தது நான் 11 ஆம் வகுப்பு படிக்கும்போதே.

- ஜவஹர், ‘தி இந்து’ இணையதளம் வழியாக...

தமிழுக்கு இழைக்கப்படும் அநீதி!

தமிழுக்காக இருக்கும் செம்மொழி நிறுவனத்தை எந்த ஒரு சரியான காரணத்தையும் கூறாமல் திருவாரூரிலுள்ள மத்திய பல்கலைக்கழகத்தோடு இணைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது (“செம்மொழி நிறுவனத்தை முடக்கப் பார்க்கலாமா?”, ஜூலை 11). தன்னாட்சி பெற்ற நிறுவனத்தைத் தமிழக அரசின் அனுமதியின்றி மாற்ற நினைப்பது மத்திய மாநில அரசுகளுக்கான உறவை பாதிக்கும் நிகழ்வாக மாறும். இன்றைய சூழ்நிலையில் மாநில அரசு இதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், நாளை இது நிச்சயமாக மாநில அதிமுக அரசு தமிழுக்கு இழைத்த பெரும் அநீதியாகக் கருதப்படும். அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பராமரிப்பதில் நீதிமன்றத்திடம் குட்டு வாங்கியது போன்ற சூழ்நிலை மீண்டும் வராமல் தடுக்க வேண்டும் என்றால், செம்மொழி நிறுவனத்தைக் காப்பாற்ற தமிழக அரசு முயற்சிக்க வேண்டும்.

-வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in