

பொதுத்துறை நிறுவனங்கள் நாட்டுக்குச் சுமையா?’ கட்டுரை, காலத்தே எழுப்பப்பட்டிருக்கும் அற்புத விவாதப் பொருள். ‘கோயில் பூசை செய்வோர் சிலையைக் கொண்டு விற்றல் போலும், வாயில் காத்து நிற்போன் வீட்டை வைத்திழத்தல் போலும்' என்று பாஞ்சாலி சபதத்தில் மகாகவி இடித்துரைத்த வேலைகளை நமது அடுத்தடுத்த ஆட்சியாளர்கள் ஒருவருக்கொருவர் கண்ணாமூச்சி ஆடியபடி செய்து கொண்டிருக்கின்றனர். தேசத்தின் சொத்து விற்பனைக்கென்றே தனி அமைச்சரை நியமித்திருந்த முந்தைய தனது ஆட்சிக் காலத்தை பாஜக பெருமையோடு இப்போது தொடர்கிறது.
‘பொதுத்துறை மும்பை மாநகரில் பெருமழை வெள்ளம் வந்தபோதும் சரி, ஒடிஸாவில் பேரிடர் ஒன்று சூழ்ந்த சமயத்திலும் சரி, ரிலையன்ஸ் போன்ற மாபெரும் தனியார் நிறுவனங்கள் பொறுப்பைக் கைகழுவிவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தபோது, பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனங்களும், காப்பீட்டு நிறுவனங்களுமே ஆகப் பெரும் சேவையை ஆற்றின என்பது அண்மைக் கால வரலாறு. மாடர்ன் பிரெட் நிறுவனம் பொதுத் துறையில் இருக்கும்போது செய்த தொண்டுகளை இப்போதைய தலைமுறை அறியாது என்பது காங்கிரஸ், பாஜக கட்சிகளின் துணிச்சல். காப்பீட்டை நோக்கி நகர்ந்து, அடுத்து வங்கிகளையும் விழுங்கக் காத்திருக்கின்றன உள்நாட்டு, பன்னாட்டு நிதி மூலதன சுறாக்கள்.
- எஸ்.வி. வேணுகோபாலன்,சென்னை