

மதரீதியான பிரிவினைகள் தூண்டப்படும்போது, மத நல்லிணக்கமே அதற்கு ஈடான ஆயுதமாக இருக்க முடியும். நாட்டில் இஸ்லாமியர்களுக்கு எதிரான செயல்களை அரசே நிகழ்த்துகிறபோது, அதற்கு ஒத்து ஊதாமல் கர்நாடகாவின் உடுப்பி பெஜாவர் மடத்தில் இஸ்லாமியர்களுக்கு இஃப்தார் விருந்து வழங்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. அதில் தயங்காமல் பங்கேற்று, சைவ உணவை உட்கொண்ட இஸ்லாமியர்களும் பாராட்டுக்குரியவர்கள். நிகழ்வில், ‘இந்துக்களும் முஸ்லிம்களும் ஒரே கடவுளின் பிள்ளைகள்’ என்று மடாதிபதி பேசியிருப்பது நல்லிணக்கத்தின் உச்சம். இதுபோன்ற நிகழ்வுகள் நாடு முழுக்க நடைபெற வேண்டியது காலத்தின் தேவை.
- சாகுல் ஹமீது, திண்டுக்கல்.
மோடியும் நெருக்கடிநிலையும்!
தனது வானொலி உரையில் ‘ஜனநாயகத்தை நேசிப்பவர்களால் அவசரநிலைப் பிரகடனத்தை மறக்க முடியாது’ என்று பிரதமர் மோடி சொல்லியிருக்கிறார். அது மிகச் சரியான கூற்று. ஆனால், இன்று நாட்டு மக்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பதையும் அவர் தெரிந்துகொள்ள வேண்டும். நாட்டில் தற்போதும் மக்கள் மத்தியில் நெருக்கடிநிலை தொடர்பான ஒரு பயமும் அவ்வழியிலேயே நாட்டை அவர் கொண்டுசென்றுவிடுவார் என்ற அச்சமும் நிலவுவது குறித்து அவர் கரிசனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- சம்பத், ‘தி இந்து’ இணையதளம் வழியாக.
வானொலி எனும் வசந்த ஊடகம்!
‘சென்னை வானொலிக்கு 80 வயது’ எனும் தங்க.ஜெய்சக்திவேல் கட்டுரை இனிய நினைவுகளைக் கிளறிவிட்டது. இந்திய அரசின் அகில இந்திய வானொலியை உலக வானொலிகளெல்லாம் திரும்பிப் பார்க்கவைத்த புகழ்பெற்ற நிகழ்ச்சியாக தென்கச்சி சுவாமிநாதனின் ‘இன்று ஒரு தகவல்’ அமைந்தது. டெல்லியிலிருந்து சென்னை வானொலி வழியே நம் காதுகளை வந்தைடையும் ‘செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண்சாமி’ என்று கரகரத்த குரலில் செய்தி வாசித்த காந்தக் குரல் கலைஞர் இன்னும் நம் காதுகளில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார்.
தினமும் மாநிலச் செய்திகள் வாசித்த செல்வராஜ், ஜெயா பாலாஜி போன்றோரின் குரல்கள் நமக்கு மொழி வளத்தைக் கற்றுத்தந்தன. இன்றும் வானொலியின் உரைக் களஞ்சியத்தில் வைத்துப் பாதுகாக்கப்படும் திருமுருக கிருபானந்த வாரியார், புலவர் கீரன், இளம்பிறை மணிமாறன், சரஸ்வதி ராமநாதன், எம்பார் விஜயராகவாச்சாரியார் போன்றோரின் இலக்கிய ஆன்மிகப் பேருரைகளை இரவு நேரம் கேட்ட ஞாபகம் பசுமையாக இருக்கிறது. இந்தியாவில் வானொலி தொடங்கப்பட்டு 90 ஆண்டுகள் கழிந்துவிட்டன.
நாடு முழுக்க இன்று 208 ஒளிபரப்பு நிலையங்கள் செயல்படுகின்றன. தமிழக வானொலி நிலையங்களில் பல பொன்விழாவைத் தாண்டிவிட்டன. இந்திய வானொலியின் பிரச்சார் பாரதி இன்று 24 மொழிகளில் ஒலிபரப்பைத் தந்துகொண்டிருக்கின்றது. அதோடு ஆங்கிலம், பிரஞ்சு, ரஷ்ய மொழிகளில் சர்வதேச ஒலிபரப்பினை மேற்கொண்டுவருகிறது.
- பேராசிரியர் சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி.
செல்பேசியும் பிரச்சினையும்!
ஜூன் - 20 நாளிதழில், ‘பாடம் மட்டும் போதுமா?’ என்ற ராமகிருஷ்ணனின் கட்டுரை படித்தேன். இன்றைய பள்ளி மாணவர்களின் நிலையை மிகவும் அழகாகவும், ஆதங்கத்துடனும் பதிவுசெய்துள்ளார். செல்போன் மாணவ - மாணவிகளிடம் எத்ததைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதைச் சொல்லியுள்ளார். விரல்நுனியில் நல்லதையும் கெட்டதையும் கற்றுத்தரும் செல்போனிலிருந்து இளைய சமுதாயத்தினர், நல்லதைவிட அல்லதைத்தான் மிக அதிகமாகக் கற்றுக்கொள்கின்றனர் என்பதைப் பல சம்பவங்களுடன் விவரித்துள்ளார். இதனைக் கண்டிக்க இயலாத நிலையில் பெற்றோர்களும் ஆசிரியர்களும் இருப்பது இளைஞர்களுக்கு வசதியாகிவிட்டது. நோய் முற்றும் முன் செல்பேசி பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வைக் காண வேண்டும்.
- ஜீவன்.பி.கே., கும்பகோணம்.