

ராஜன்குறை கட்டுரை படித்தேன். பதினைந்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணத்தில் அப்பு ஐயர் என்று ஒருவர் இருந்தார். காங்கிரஸ்காரர். கருமை நிறம். நெற்றியில் சிவப்புக் கோடிட்ட ஒற்றை நாமம் இட்டிருப்பார். அஞ்சல் துறையில் பணியாற்றிவந்தார். எங்காவது ஒரு அநாதைப் பிணம் உள்ளது என்று தகவல் தந்தால், உடனே அங்கு சென்று, மளமளவென்று காரியங்கள் செய்து, இடுகாட்டில் தாமே முன்னின்று ஈமக்கிரிமைகள் செய்வார். சாதி பேதமில்லாமல் இதனைச் செய்தார்.
ஒருமுறை அவரிடம் ‘‘இந்த சேவை மனப்பான்மை எப்படி உங்களுக்கு வந்தது?” என்றேன். அதற்கு அவர் “நான் சிறுவனாக இருக்கும்போதே காங்கிரஸ்காரன். பெரியார் காங்கிரஸை விட்டு விலகும்போது நான் சிறுவன். அனைத்துச் சாதியினரையும் சமமாக மதிக்க வேண்டும் என்பது பெரியார் கருத்து. எனவே, எனக்குப் பெரியாரைப் பிடித்திருந்தது. வாழும் மனிதர்கள் சாதி மத பேதங்களை விட்டு விலகவில்லை. ஒருவர் யாருமற்ற அநாதையாக இறந்தால் அவரையாவது சாதியற்ற மனிதராக இறுதிக்கடன் செலுத்துவது புண்ணியம் என்று கருதினேன். இந்த கருத்துக்குப் பெரியார்தான் காரணம்’’ என்றார். பெரியார் இல்லாமல், குறிப்பாக தென்னிந்திய வரலாறு இல்லை எனலாம்.
- பேராசிரியர் முனைவர் குடந்தை உசேன்,மின்னஞ்சல் வழியாக…