

டாஸ்மாக் என்னும் மெல்லக் கொல்லும் விஷத்தை இன்னும் எத்தனை காலம்தான் நாம் அனுமதிப்பது? ‘மெல்லத் தமிழன் இனி’ கட்டுரைகளில் வரும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களைப் பற்றி படிக்கும்போது கண்ணீர் வருகிறது.
தமிழகத்தின் மக்கள் தொகை 7.21 கோடி பேர். இதில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் குடிநோயால் பாதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சிக்குரியது.
கடந்த 13 ஆண்டுகளாக இங்குள்ள அரசுகள் தமிழக மக்களுக்கு இந்த விஷத்தை விற்று அடைந்துள்ள வருவாய் ரூ. 1,33,000 கோடி என்பதாக ஒரு கணக்கு. இந்த விஷத்தை விற்ற வருமானத்தில்தான் மக்கள் நலன் காக்கும் திட்டங்கள் என்ற பெயரில் ‘உற்பத்தி சாராத இலவசங்கள்’ ஓட்டுக்காக அளிக்கப்படுகின்றன.
இங்கு ஏழை மக்களின் மருத்துவ வசதிக்காக 1,614 ஆரம்ப சுகாதார நிலையங்கள்தான் இருக்கின்றன. ஆனால், அவர்களின் உடல் நலனை கெடுக்க சுமார் 6,800 மதுக்கடைகள் இருக்கின்றன. குடிநீர், கல்வி, மருத்துவத்தை தனியாரிடம் அளித்துவிட்டு, மதுபான விற்பனையை அரசு மேற்கொள்ளும் அநீதிக்கு முடிவு எப்போது? மக்கள் பொங்கி எழ வேண்டும். டாஸ்மாக் விஷத்தை முற்றிலும் அகற்றும் வரை ஓய மாட்டோம் என்று சபதம் செய்ய வேண்டும்.
-ஆறுபாதி கல்யாணம்,பொதுச் செயலாளர், விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு, காவிரி டெல்டா மாவட்டங்கள்.