Published : 22 Mar 2017 10:13 AM
Last Updated : 22 Mar 2017 10:13 AM

இப்படிக்கு இவர்கள்: இயற்கைக்கு ஏற்ற வாழ்வியலுக்கு மாறுவோம்!

ஐக்கியம் சி.வையாபுரி தனது நேர்காணலில் (மார்ச் 20) ‘குடிநீருக்காகவே கிணறு வெட்டலாம்; எக்காரணம் கொண்டும் கிணறு தோண்டி விவசாயம் செய்யக் கூடாது’ என்று சேதுபதி மன்னர்கள் கட்டுப்பாடு விதித்த வரலாற்றுக் குறிப்பை முன்வைக்கிறார். இது மன்னர்கள் கட்டளை மட்டுமல்ல, மண்ணுக்கும் மக்களுக்கும் ஏற்ற சுய பொருளாதாரத்தை முன்வைத்துத் தொண்டாற்றிய ஜே.சி.குமரப்பா தொடர்ந்து வலியுறுத்திய கருத்துமாகும். மின்உற்பத்தியைப் பெருக்கி, கிராமப்புற விவசாயிகள் கிணறுகளில் மின்சார பம்ப்செட்டுகளைப் பயன்படுத்த முதல்வர் காமராசர் திட்டம் போட்டபோது, ‘‘பம்ப்செட் பாசனம் கரும்பு, வாழை, பருத்தி, புகையிலை, உருளைக் கிழங்கு போன்ற வணிகப் பயிர்களின் உற்பத்திக்குப் பயன்படுவது. இவை வணிகத்தை முதன்மையாக்கி, வேளாண்மையைத் தலைகீழாக்கிவிடும்.

எனவே, பம்ப்செட்டுகளுக்கு மாற்றாக, நீர்நிலைகளையும் குளங்களையும் அரசு பெருக்க வேண்டும். அதைக் கொண்டு புஞ்சைப் பயிர்களான சிறு தானியங்கள், தீவனங்கள், எண்ணெய் வித்துகள், பருப்பு வகை போன்றவை பெருமளவில் உற்பத்தி செய்யத் திட்டங்கள் தீட்ட வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார். சி.வையாபுரியின் யோசனை எப்படி எம்.ஜி.ஆரால் ஏற்கப்படாமல் போனதோ, அதுபோல அக்காலத்தில் ஜே.சி.குமரப்பா வலியுறுத்தியதும் எடுபடாமல் போயிற்று. இந்த வினையெல்லாம் சேர்ந்து இன்று மக்கள் தலையில் மொத்தமாய் விடிந்துள்ளது.

நகர வணிகத் தேவைகளுக்கும் தொழிலதிபர்களுக்கும், முதலாளியப் பொருளாதாரத்துக்கும் ஆதரவாகச் செயல்படும் போக்கை அரசும் ஆட்சியாளர்களும் மாற்றிக்கொள்வதும், அபரிமிதமான உற்பத்திக்காக அபரிமிதமாக நிலத்தையும் நீரையும் சுரண்டியவர்கள் இயற்கைக்கு ஏற்றவாறு வாழ்வியலை அமைத்துக்கொள்வதுமே இப்பிரச்சினைக்குத் தீர்வு.

- பா.செயப்பிரகாசம். எழுத்தாளர், புதுச்சேரி.



நூலக வகுப்புகள் வேண்டும்

வாசிப்புப் பழக்கம் பள்ளிக்காலம் தொட்டே உருவாக்கப்பட வேண்டியது. பள்ளி நூலகங்களில் பொதுநூல்களோடு அதிகமாகச் சிறுவர் இலக்கியம், சிறுவர்களை மையமிட்ட நூல்கள் இடம்பெற வேண்டும். பள்ளிகளில் வாரம் ஒருநாள் நூலக வகுப்பாக மாற்றப்பட்டு, ஆசிரியர்களின் வழிகாட்டலில் நல்ல நூல்களைப் பள்ளிக் குழந்தைகள் வாசிக்க வாய்ப்பளிக்கலாம். நூல்களை வாசித்துப் புரிந்துகொண்ட விதம் குறித்து, மாணவர்களை வகுப்பறைகளில் பேசவைக்கலாம்.

ஒவ்வொரு பள்ளியிலும் சிறுவர் இதழ்கள் வாங்கப்பட்டு மாணவர்களுக்கு வாசிக்கத் தரப்பட வேண்டும். போட்டிகளில் பள்ளி மாணவர்கள் வெற்றிபெறும்போது, நல்ல நூல்களை அவர்களுக்குப் பரிசளிக்கலாம். மாவட்டம் தோறும் உள்ள மாவட்ட மத்திய நூலகங்களில் சிறுவர் நூல்கள் பிரிவு நவீனமாக்கப்பட வேண்டும். வீடியோ கேம்களுக்குள் தொலைந்துகொண்டிருக்கும் குழந்தைகளை மீட்க வாசிப்புப் பழக்கம் ஒன்றே துணைபுரியும்.

- சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி.



கையறு நிலை

மார்ச் 16 நாளிட்ட ‘பாகுபாட்டை அழிக்காத கல்வியால் என்ன பயன்?’ என்ற தலையங்கமும் ‘முத்துகிருஷ்ணனை நான்தான் கொன்றேன்!’ என்று ஆழி செந்தில்நாதன் எழுதியுள்ள கட்டுரையும் கூரிய வாள் கொண்டு நெஞ்சைப் பிளப்பதுபோல் அமைந்துள்ளன. இந்திய அரசியல்வாதிகள் கல்வியையும் கல்வி நிறுவனங்களையும் திட்டமிட்டுச் சீரழித்துவருகிறார்கள். சாமானிய மனிதர்கள் கையறு நிலையில் உள்ளனர்.

- எம்.ஆர்.சண்முகம், கோபிசெட்டிபாளையம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x