

மே 10-ல் ‘5 கேள்வி 5 பதில்கள்’ பகுதியில் மேல்நிலைக் கல்வி, பள்ளியுடன் சேர்க்கப்பட்டது குறித்து பேராசிரியர் கல்விமணி தெரிவித்துள்ள கருத்துகள் சரியல்ல. கோத்தாரி கல்விக் குழு 1966-ல் 10+2+3 என்ற கல்வி அமைப்பை நாடு முழுமைக்கும் கொண்டு வர பரிந்துரைத்தது. அதில் இரண்டாண்டு இடைநிலைப் படிப்பை பள்ளியுடனோ, தனித்தோ நடத்தலாம் என்றும் கூறியது. சுக்லா என்பவர் தலைமையில் மத்திய அரசு அமைத்த குழு மேல்நிலைக் கல்வி பள்ளிகளில் அமைவதன் மூலம் உயர்கல்வி கிராமப்புற மாணவர்களுக்கும் கிடைக்க உதவும் என்று கூறியது. அப்போது குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்ததால், கல்விச் செயலர் சி.ஜி.ரங்கபாஷ்யத்தின் தலைமையில் அமைக்கப்பட்ட குழு சுக்லா குழுவின் பரிந்துரையை ஏற்றது.
மேல்நிலைப் பள்ளிகளாக உயர்த்தப்பட வேண்டிய பள்ளிகளைத் தெரிவு செய்ய லாரன்ஸ் என்பவர் தனி அலுவலராக நியமிக்கப்பட்டார். இந்நேரத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்தது. 200 பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக உயர்த்த அரசுக்கு பரிந்துரைத்தார் அந்தத் தனி அலுவலர். அப்படிச் செய்தால் கிராமப்புற மாணவர்களுக்கு முழுப்பயன் தராது என்று தடாலடியாக 1,000 பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக உயர்த்த ஆணையிட்டார் முதல்வர் எம்ஜிஆர். இன்று லட்சக்கணக்கானோர் உயர்கல்வி பெற மேல்நிலைப் பள்ளிகளே காரணம் என்பதை மறுக்க முடியாது.
-ச.சீ.இராஜகோபாலன், சென்னை.
வாசகரின் கேள்விக்குப் பதிலளிக்கும் பண்பாடு வாழ்க!
தாய்மொழியில் எழுதத்தெரியாத மணமகனைப் புறக்கணித்த பெண்ணைப் பற்றிய செய்திக்கு ‘இந்தி எழுதத்தெரியாத மணமகனை துணிச்சலுடன் மறுத்த பெண்’ (மே. 7) என்று தலைப்பிட்டிருந்தது இந்திக்கு ஆதரவான மனநிலையை உருவாக்கும் முயற்சி என்று என் எதிர்ப்பை ‘தி இந்து’ நாளிதழுக்கு அனுப்பியிருந்தேன். அதற்குப் பொறுப்புடன் பதில் அளித்து மின்னஞ்சல் செய்ததுடன், தவறை உணர்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர். ஒரு சாதாரண வாசகரின் கேள்விக்கும் பதிலளிக்கும் அவர்களின் பொறுப்பான பண்பாட்டிற்கு வாழ்த்தும் நன்றியும். இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்!
-எஸ்.கருணா, முகநூல் வழியாக.
கண்ணீர் வரவைத்த எழுத்து!
தஞ்சாவூர்க் கவிராயர் எழுதிய ‘கடைசி மீன்கொத்தி’ என்னும் வாழ்வியல் மரபுகளை அடையாளப்படுத்தும் குறுங்கட்டுரை (மே. 7) படித்தேன். பாடுபட்ட நிலத்தை இளைய தலைமுறை விற்பதையும், மூத்தத் தலைமுறையினரின் விரல்ரேகைகள் பத்திரத் தாள்களில் உருட்டப்படுவதையும் பற்றி அவர் எழுதியிருந்ததை வாசித்தபோது கண்ணீர் வழிந்தது. கவிராயரின் எழுத்தில் ஒரு படப்பிடிப்புத் தன்மையைக் கண்டு வியந்தேன்.
-தி.நெடுஞ்செழியன், இணைப்பேராசிரியர், திருச்சி.
தவறான போராட்டம்!
மகாராஷ்டிரா காங்கிரஸ் மகளிர் அணியினர், பிரதமர் மோடிக்கு வளையல் அனுப்பும் போராட்டம் பற்றிய செய்தியை (மே. 9) வாசித்தேன். அவர்கள் வளையல் அனுப்புவதன் காரணமென்ன? “பாகிஸ்தான் நம் எல்லையைத் தாண்டி வந்து நம் வீரர்களைக் கொன்றுள்ளது. அதைத் தடுக்கவோ, பதில் நடவடிக்கை மேற்கொள்ளவோ இயலாத மத்திய அரசு, ஒரு கையாலாகாத பயந்தாங்கொள்ளி அரசு. அவ்வாறு துணிச்சலின்றி நடந்துகொள்வது பொதுவாக மகளிர் குணம்.
ஆகவே மோடியும் வளையல்களை அணிந்துகொள்ள வேண்டும்” என்பதா? அதுதான் காரணமென்றால், காங்கிரஸ் மகளிரணியினர் இழிவுபடுத்தியது மோடியையா? தங்களைத் தாங்களேவா? முன்பு பாஜக கையாண்ட அதே வழியே காங்கிரஸும் கையாள வேண்டியதில்லை.
-பி.ஜீவகன், சாலிகிராமம், சென்னை.