

பி.ஏ. கிருஷ்ணனின் ‘உழைக்கும் மக்களே ஒன்றுபடுங்கள்’ கட்டுரை (நவம்பர் 7), ரஷ்யப் புரட்சி தினத்தன்று வெளிவந்திருப்பது நல்ல ஒற்றுமை. மூலதனத்தின் நிர்ப்பந்தத்துக்கு ஏற்ப மோடி அரசும் சட்டத் திருத்தங்களைச் செய்யத் துடிக்கிறது.
காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் பொருளாதாரக் கொள்கை கண்ணோட்டத்தில் மிகப் பெரிய வேறுபாடு இல்லை என்பது தெளிவு. 2002 ஆகஸ்ட் 4 அன்று ஐசிசி என்னும் முதலாளிகள் அமைப்பு ஒன்று, ஆங்கில ஏடு ஒன்றில் முழுப் பக்கம் விளம்பரம் கொடுத்திருந்தது. ‘பிரதமர் வாஜ்பாய் அவர்களே, வேலைவாய்ப்பை வழங்க அனுமதிக்காத சட்டங்களைத் தூக்கிப் போடுங்கள்' என்பது அதன் தலைப்பு.
அதாவது, யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வேலையில் வைக்கலாம், நயா பைசா நஷ்ட ஈடோ - காரணங்களோ வழங்காமல் வெளியேற்றலாம்' என்கிற மாற்றத்தைத்தான் முதலாளிகள் தாகத்தோடு கேட்டது. கட்டுரையாளர் சொல்லியிருப்பதுபோல், இருக்கும் சட்டங்களே முழுமையாகத் தொழிலாளர் நலனை அமல்படுத்தாது இருக்கும்போது, உழைப்புச் சுரண்டலுக்கு ஆதரவாக மோடியும் ஜேட்லியும் பகிரங்கமாகக் குரல்கொடுக்கின்றனர். உழைக்கும் மக்கள் ஒன்றுபட வேண்டும் என்பது இந்த விஷம-விஷ அரசியலையும் கண்டுணர்ந்து ஒன்றுபடவேண்டும் என்பதாக இருக்கட்டும்.
- எஸ்.வி. வேணுகோபாலன்,சென்னை.