

தனியார்மயம் அறிமுகமானபோது, பல்கலைக்கழகங்கள் தங்களுக்கான நிதியாதாரத்தைப் பெருக்கிக்கொள்ள வேண்டும் என்ற ஆலோசனை வழங்கப்பட்டது. அந்த ஆலோசனையை அப்படியே ஏற்றுக்கொண்டு, உயர் கல்வியைப் பணமயமாக்கிய தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களின் முன்னோடி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
தொலைநெறிக் கல்வி வழியாக வரையறை மீறிய அனுமதிகளை வழங்கி, எல்லா வகையான பட்டதாரிகளையும் உற்பத்தி செய்தது. குறிப்பாக, கல்வித் துறைக்குத் தேவையான - ஆசிரியத் தகுதிக்கான கல்வியியல் பட்டங்களைத் தரமே பார்க்காமல் வழங்கியது. அப்பல்கலைக்கழகம் வழங்கிய பிஎட், எம்எட், எம்பில், முனைவர் பட்டங்களால் தமிழகக் கல்வித் துறை மட்டுமல்ல, இந்தியக் கல்வித் துறையின் அடிப்படைகளே ஆட்டம் கண்டன. அதனைக் கண்டறிந்த பின்பே தொலைநெறியில் இவ்வகைப் பட்டங்கள் வழங்குவதற்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டு நிறுவனங்கள் தடைகளைக் கொண்டுவந்தன.
விண்ணப்பம் வாங்குவது தொடங்கி, கற்றல், கற்பித்தல், தேர்வு, திருத்தல் பணி எனக் கல்வித் துறையின் அனைத்துக் கூறுகளிலும் பிழையானவர்களைக் கொண்டு நிரப்பிக்கொண்ட அப்பல்கலைக்கழகம், கண்டதையும் தின்று வயிறு ஊதித் தவிக்கும் நிலையில் இருக்கிறது. பேதி மாத்திரை சாப்பிட்டுக் கழிய வேண்டிய நிலையில் இருக்கும் அதற்குத் தேவை மருத்துவம். ஆனால், அரசோ பேதி மாத்திரைக்குப் பதிலாக ஊக்க மருந்து கொடுக்கப்பார்க்கிறது. அதே வயிற்றுப் பொருமலோடு வருபவர்களால் மற்ற உயர் கல்வி நிறுவனங்களும் பாதிக்கப்படும் என்பதை அரசு உணர வேண்டும்.
இதனைச் சுட்டிக்காட்டி, ‘தி இந்து’ தலையங்கம் எழுதியிருக்கிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வரைமுறை இல்லாமல் பணியில் அமர்த்தப்பெற்ற ஆசிரியர்களையும் ஆசிரியரல்லாத பணியாளர்களையும் பற்றிப் பேசுகிறது. அவர்களுக்குக் கருணையின் அடிப்படையில் வேறு இடங்களில் அதே உயர் கல்வித் துறைக்குள் பணி வாய்ப்பு அளிக்க இருக்கும் அரசின் முடிவைப் பரிசீலனை செய்யும்படி கோருகிறது. இந்தக் கோரிக்கை சரியானது.
- அ. ராமசாமி, நெல்லை
மருந்து விலைக்குத் தீர்வு!
மே 4-ல் வெளியான, ‘ஜெனரிக் யுத்தம்’கட்டுரை வாசித்தேன். ஜெனரிக் மருந்துகள் வேறு எங்கோ தனியாகத் தயாரிக்கப்படுபவை அல்ல. எல்லா மருந்துகளையும் தயார்செய்யும் இடத்தில், அதே தரத்தில்தான் அதுவும் தயாராகிறது. ஒவ்வொரு மருந்து நிறுவனமும் விளம்பரம், விற்பனைப் பிரதிநிதிகளின் சம்பளம், மருத்துவர்களுக்கு அளிக்கப்படும் மாதிரிகள், பரிசுப் பொருட்கள், காலாவதி மூலம் ஏற்படும் இழப்பு மற்றும் ஆய்வகச் செலவினங்கள் என எல்லாவற்றையும் சேர்த்துத்தான் விலை நிர்ணயிக்கின்றன. ஜெனரிக் மருந்துகளுக்கு இவையெல்லாம் தேவையில்லை என்பதால், விலை மலிவாக இருக்கிறது. ஒவ்வொரு மருந்துக் கடையிலும், ஜெனரிக் மருந்துகளை மலிவான விலையில் விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வதே இப்பிரச்சினைக்கு நல்ல தீர்வாக அமையும்!
- எஸ்.ராமசந்திரன், தலைவர் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம், மன்னார்குடி.
புத்தக மன்றங்கள் தேவை!
மே 6 அன்று வெளியான, ‘புத்தக மன்றங்கள், பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் உருவாக வேண்டும்’என்ற தலையங்கம் வாசித்தேன். ‘உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ, அதேபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு’ என்றார் அறிஞர் சிக்மண்ட் ஃப்ராய்டு. இன்றைய இளம் தலைமுறையினரைப் புத்தகத்தின் பக்கம் திருப்பிய திருவாரூர் மாவட்டம் மேலராதாநல்லூர் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டுக்குரியவர்கள். ‘தி இந்து’தலையங்கம் இந்த இயக்கத்தை மேலும் பரவலாக்க வழிவகை செய்யும்!
- எஸ்.பரமசிவம், மதுரை.