

‘முத்தமிடுவதால் செத்துவிடுமா கலாச்சாரம்?’ கட்டுரை படித்தேன். உற்பத்தி முறைதான் கலாச்சாரத்தில் பிரதிபலிக்கும். இந்திய அரசின் உலகமய, தனியார்மய, தாராளமயக் கொள்கைகளைக் கொண்ட அந்நிய மூலதனச் சார்பு உற்பத்தி முறை, அந்நியக் கலாச்சாரத்தை இங்கு கொண்டுவராதா? இந்த ‘கலாச்சாரக் காவலர்கள்’ அந்நிய மூலதனத்தையோ பன்னாட்டு நிறுவனங்களையோ எதிர்ப்பதில்லை. மாறாக, அந்நிய மூலதனத்தைக் கூவிக்கூவி அழைக்கும் பாஜகவுக்குக் காவலர்களாக உள்ளனர்.
அதே சமயம் எவ்வாறு இவர்கள் அந்நியக் கலாச்சாரத்தை மட்டும் எதிர்ப்பது திசைதிருப்பும் செயலோ, அவ்வாறே இந்த இளைஞர்களின் முத்தமிடும் போராட்டமும் அடையாள அரசியலே, அநாகரிக போராட்ட வடிவமே. காதலுக்கு ஆதரவான எத்தனையோ போராட்ட வடிவங்கள் உள்ளன. சாதி மறுப்புத் திருமணங்கள், கவுரவக் கொலைக்கு எதிரான போராட்டங்கள், தீண்டாமை வன்கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்கள், திருமணத்தில் பெண்களுக்குச் சுதந்திரத் தேர்வை மறுக்கும் ஆணாதிக்கச் சமூக கட்டமைப்புக்கு எதிராக, சாதிய, இந்துத்துவ அடிப்படைகளுக்கு முட்டுக்கொடுக்கும் இந்த அரசமைப்புகளுக்கு எதிராக, இந்த இந்துத்துவக் காவலர்கள் காவல் காக்கும் அந்நிய மூலதனத்துக்கு எதிராக என்று இளைஞர்கள் போராட்டங்களை விரிவாக எடுத்துச் செல்ல வேண்டும். எவ்வாறு சுரண்டல் அமைப்பு கலாச்சாரச் சீரழிவுகளைக் கொண்டுவந்ததோ, அவ்வாறு சுரண்டலற்ற நாளைய மேம்பட்ட உயர்வளர்ச்சி சமூகம் நாகரிக சமூகமே.
- ஜ. வெண்ணிலா,சென்னை.