

மே 6 அன்று வெளியான ‘இந்தி சரியாகத் தெரியாத இளைஞருடன் திருமணம் வேண்டாம் உ.பி.யில் துணிச்சலாக மறுத்த இளம்பெண்!’ என்ற செய்தியைப் பார்த்தேன். சரியாக எழுதப் படிக்கத் தெரியாதவரை திருமணம் செய்ய மறுத்துள்ளார் அந்தப் பெண். அதாவது, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அந்தப் பெண் தன் தாய்மொழியான இந்திகூடத் தெரியாத இளைஞருடன் திருமணம் வேண்டாம் என்று நிராகரித்துள்ளார். ‘தாய்மொழி தெரியாத இளைஞருடன் திருமணம் வேண்டாம் - உ.பி.பெண் துணிச்சல்!’ என்றல்லவா தலைப்பிட்டிருக்க வேண்டும்? டெல்லியிலிருந்து வரும் தேசிய செய்திகளை மொழிபெயர்த்துக் கொடுக்கும்போது நம்மூருக்கு ஏற்றவாறு தலைப்பைக் கவனமாக மாற்ற வேண்டாமா? இன்னும் கூடுதல் கவனத்துடன் பணியாற்ற வேண்டும்.
- சுபகுணராஜன், சென்னை.
எழுதப்படாத விஷயம்
மோடியின் காலத்தை உணர்தல் தொடரில், ‘கோயில்களில் என்ன நடக்கிறது?’ (மே - 3) கட்டுரை கவனத்துக்குரிய, ஆனால் இதுவரை எழுதப்படாத முக்கியமான விஷயம் ஒன்றின் முதல் ஆய்வு என்று கருதுகிறேன். தமிழ் அடையாளத்தின் ஓர் அங்கமாக சமயத்தைக் காட்ட முயன்ற (ஒரு வழியில்) மறைமலை அடிகளைத் தொடர்ந்து எதுவும் நடைபெறவில்லை. ஒரு வெற்றிடம் அப்படியே இருக்கிறது. சமயமல்ல, சமயவாதிகளின் தூய்மைவாதம்தான் மக்களைப் பிரிக்கிறது என்று துல்லியமாகக் கூறியுள்ளார். தத்துவ விசாரம் (விசாரத்துக்குக் கவலை என்றும் பொருள் உண்டு) குறைந்தால் ஆகாதது எல்லாம் உள்ளே வரும். இந்து மடாதிபதிகள் நிறையப் படிக்க வேண்டியுள்ளது. அவர்களுக்குத் தத்துவ விசாரம் வர வேண்டும்.
`தி இந்து’வுக்கு வாழ்த்துகள்!
- தங்க.ஜெயராமன், திருவாரூர்.
கலங்க வைக்கும் பெண் காவலர்களின் நிலை
அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் இருந்தது, ‘விடுமுறையின்றிப் பணியாற்றிய பெண் காவலர் மரணம்’ என்ற செய்தி (மே-2). மாதவிடாய், கர்ப்ப கால வேதனைகள், குழந்தை பிறந்த பின் படுகின்ற அவஸ்தைகள் என்று அத்தனையையும் தாங்கிக்கொண்டுதான் பெண் காவலர்கள் பணியாற்ற வேண்டிய சூழல். கால் கடுக்கப் பல மணி நேரம் நிற்கும் பெண் போலீஸைப் பார்த்தால் கண்ணீர்தான் வருகிறது. தன் வேலையைப் பார்க்கவே அவர்கள் பல இடர்களைக் கடந்து வர வேண்டிய சூழ்நிலை. இந்நிலையில், பலர் செய்ய வேண்டிய வேலையை ஒருவரே செய்து அவதிப்பட்டு உயிர் விட்ட பின்னும் இந்த அரசு மௌனம் காக்கப் போகிறதா?
- ஜே.லூர்து, மதுரை
அவசியமான கட்டுரை
கோடையில் ஏற்படும் தோல் வறட்சி, நீர்க்கடுப்பு, வெப்ப மயக்கம் போன்ற நோய்கள் பற்றியும் அவற்றுக்கான காரணங்களைப் பற்றியும் ‘கோடைக்குத் தயாராவோம்’ (மே - 3) கட்டுரையில் எளிய மொழியில் விளக்கியிருக்கிறார் டாக்டர் கு.கணேசன்.
அவற்றைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள், வந்த பின் செயல்படுத்த வேண்டிய சிகிச்சைகள் குறித்தும் குறிப்பிட்டது அருமை. அவரின் பல கட்டுரைகளை எங்கள் பள்ளி நூலகத் தகவல் பலகையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பார்வைக்கு வைத்திருக்கிறேன்.
- இரா. ரமேஷ் குமார், நூலகர்,
சைனிக் பள்ளி, அமராவதி நகர்.