

‘இந்தியாவைத் தூய்மைப்படுத்துவது எப்படி?’ தலையங்கம் ஆழமான சிந்தனையின் வெளிப்பாடு. இப்போதைய திட்டம், புற்றுநோயால் பீடிக்கப்பட்டு அவதியுறும் நோயாளியின் உடம்பைச் சுத்தம் செய்து, அவரை அழகுபடுத்தும் விதமாகத்தான் அமைந்திருக்கிறது.
அவரது நோயின் தீவிரத்தைக் கண்டறிந்து, அதற்கான சிகிச்சை அளிக்க முன்வரவில்லை. இந்தியாவிலுள்ள எல்லா நதிக்கரைகளும் கடற்கரைகளும் பெரிய தொழிற்சாலைகளுக்குக் கழிவுகளைக் கொட்டும் கூவமாகத்தான் உள்ளது. ஒவ்வொரு ஊரின் குளங்களும், கால்வாய்களும் அந்தந்த ஊர்களில் இருக்கும் கனரக, நடுத்தர தொழிற்சாலைகளின் கழிவுக்கலமாகத்தான் உள்ளது.
உள்ளூர் மக்களின் போராட்டக் குரல்கள் செவிடன் காதில் ஊதிய சங்காய் உள்ளது. மத்திய மற்றும் மாநில சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுத் துறைகள் வாய் மூடி மௌனமாகவே உள்ளன. மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் பெரிய விஷயங்களை விடுத்து, சாலைகளில் குவியும் குப்பையைக் குறிவைக்கும் மோடியின் திட்டம் ‘அவர் புலிகளை வேட்டையாடுவார் என நினைத்த நம்மைப் போன்றோருக்கு அவரது எலி பிடிக்கும் முயற்சி’ ஏமாற்றத்தைத் தருகிறது.
- அ. பட்டவராயன்,திருச்செந்தூர்.