

‘அம்மா எனக்கு ஒரு வரம் கேள்' என்ற ரெஹானா ஜப்பாரியின் குரல், சிறைக் கதவுகளைக் கடந்து மனித மனசாட்சியை நோக்கி விடுக்கப்பட்ட அறைகூவலாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. வெஞ்சிறையிலிருந்து பகத்சிங் விடுத்த விடுதலைப் பிரகடனம் போலவும் இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் இன வெறியையும் குரூரத்தையும் அம்பலப்படுத்திய அன்னிபிராங்க்கின் நாட்குறிப்புப் போலவும், பாகிஸ்தானின் மலாலாவின் போர்க் குரல் போலவும் அழியாத ஆவணமாக அமைகிறது, ரெஹானாவின் உள்ளத்தை உருக்கும் உயிரின் வேதனைக் குரல்.
ஆண் வர்க்கத்தின் தீராக் கொடுமைகளுக்குப் பெண் குலம் இன்னும் இரையாகிக்கொண்டிருப்பதை நாகரிகம் பிதற்றும் உலகச் சமுதாயம் மாறாக் களங்கமாகத் தூக்கிச் சுமந்துகொண்டிருக்கிறது. அதுவும் பெண் விடுதலைக்குப் பெரும் பங்களிப்பதாகப் பேசப்படும் இஸ்லாம் ஆட்சி செய்யும் நாட்டிலா இக்கொடுமை என்று அதிர்ந்துபோகிறோம். ரெஹானாவின் பெண் விடுதலை ஆவணத்தில்தான் எத்தனை துணிச்சல்… எத்தனை உருக்கம். நீதிமன்றங்களின் மீதும் காவல் துறையினர் மீதும் எத்தனை ஆற்றாச் சினம். தான் வாழ்ந்த தேசத்தின் மீது எத்தனை ஏளனம். இது ஒரு நாட்டுக்கு அல்லது ஒரு சமுதாயத்துக்கு மட்டுமான சீற்றம் அல்ல, பழிபடும் வாழ்வின் இற்றுப்போன சாஸ்திர சம்பிரதாயங்களை இன்னும் உயிரோடு பாதுகாத்துவைத்திருக்கும் ஒவ்வொரு நாட்டின் மீதும் சமுதாயத்தின் மீதும் ஓங்கி உயர்கிற கண்ணகிக் கோபம். மனசாட்சியுள்ள ஒவ்வொரு இதயத்தையும் நோக்கிப் பாயும் குறி தவறாத அம்பின் பாய்ச்சல். இந்த அற்புதமான ஆவணத்தைத் தந்திருக்கும் ‘தி இந்து’ தமிழ் அனைவருடைய போற்றுதலுக்கும் உரியது.
சிற்பி பாலசுப்பிரமணியம்,பொள்ளாச்சி.