

கவிஞர் விக்ரமாதித்யன் எழுதிய ‘பாடல் ஒரு கோடி செய்தாய்!' என்ற கவியரசு கண்ணதாசனின் நினைவுநாள் கட்டுரை படித்தேன்.
இலக்கியத் தமிழ் மட்டுமே திரைத் துறையில் நிறைந்திருந்த காலத்தில், பாமரத் தமிழில் பாட்டெழுதி அனைவர் மனதிலும் நிறைந்த கண்ணதாசனின் திரைப் பாடல் அல்லாத கவிதைகளைச் சுட்டிக் காட்டி எழுதப்பட்ட கட்டுரை பொக்கிஷம். மனிதர்கள் மதம் பிடித்து அலையும் காலத்தில் ‘அர்த்தமுள்ள இந்து மதம்' எழுதி ‘இயேசு காவியமும்' படைத்தவர் கண்ணதாசன். காமத்தையும் விரசமின்றிப் பாட்டில் சொல்லி, கேட்பவர் காதை இனிக்கச் செய்தவர் கண்ணதாசன். ‘நலந்தானா, உடலும் உள்ளமும் நலந்தானா...' என அண்ணாவுக்கும், ‘அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி...' என கர்மவீரருக்கும் பாட்டாலே தூது அனுப்பி அவர்கள் கட்சியில் சேர்ந்தவர் கண்ணதாசன். முதல் பாடலான ‘கலங்காதிரு மனமே..' தொடங்கி, கடைசிப் பாடலான ‘கண்ணே கலைமானே...' வரை அவர் திரையுலகில் செய்த ஆட்சியைக் காலனைத் தவிர எவராலும் தட்டிப்பறிக்க முடியவில்லை.
-ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்,வேம்பார்.
கண்ணதாசனின் பெயரைக் கேட்டாலே, மனம் சலங்கை இல்லாமலே நர்த்தனமாடுகிறது. நம் மனம் வேதனையில் இருந்தாலும் சரி, சந்தோஷமாக இருந்தாலும் சரி, அவரது பாடல்கள் அப்படியே நம்மை வாரிச் சுருட்டிக்கொண்டு போய்விடும்.
காதலை அடிப்படையாகக் கொண்ட அவரது சிருங்காரப் பாடல்கள் தனித்துவம் மிக்கவை ‘இரு விழியாலே மாலையிட்டான்' (ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன் ) வரிகளும், ‘அழகு சிரிக்கின்றது; ஆசை துடிக்கின்றது' பாடலும், ‘மடி மீது தலை வைத்து'- மயக்கும் வரிகளில் வசீகரிக்கும் குரலில் பாடப்பெற்ற இப்பாடலும் ‘மெல்ல மெல்ல அருகில் வந்து....' முடிவேயில்லாத பட்டியல் இது. சிருங்கார ரசத்தைக்கூட நாகரிகமாகவும் கண்ணியமாகவும் கண்ணதாசனால் மட்டுமே சொல்ல முடியும். கண்ணதாசனின் கவிதைகளுடன் கைகுலுக்கும்போது நாம் எங்கோ தொலைந்து போகிறோம்.
- ஜே. லூர்து,மதுரை.