

வாழ்க்கைக்கு ஆயிரமாயிரம் வரையறைகளைப் படித்திருக்கிறோம். லா.ச.ரா. போல் யாரும் எளிமையாய் சொன்னதில்லை, “சில அழகான மக்களைச் சந்திக்கிறோம், அதற்குத்தான் வாழ்க்கை” என்று அவர் சொன்னது திகைப்பாயிருக்கிறது. சௌந்தர்யத்தை அந்தரநடையில் தந்த அற்புதக் கலைஞர் லா.ச.ரா. கருப்பு மை பூசிய காரிருளில் திடீரென்று பாய்ந்து நம்மைப் பரவசப்படுத்தும் மின்மினிப்பூச்சி போன்றது முன்னுதாரணமற்ற லா.ச.ரா-வின் எழுத்துநடை.
மவுனத்தின் நாவுகளால் தன் படைப்பில் பேசிய மாகலைஞானியும்கூட. வாசகனை உள்ளொளி நோக்கிப் பயணிக்க வைத்தவர். ‘என் பிரியமுள்ள சினேகிதனுக்கு’, ‘பச்சைக் கனவு’, ‘வித்தும் வேரும்’, ‘யோகம்’, ‘பாற்கடல்’ அவருடைய அற்புதமான படைப்புகள். வாசகனை மயக்கவைத்த ‘அபிதா’ எனும் அவர் குறுநாவலில், ‘கண்ணைக் கசக்கி இமைச் சிமிழ் திறந்ததும் கண் கரிப்புடன் திரையும் சுழன்று விழுந்து சித்திரத்திற்குக் கண் திறந்த விழிப்பு’ என்று சொல்லியபடி, ‘அபிதா, நீ என் காயகல்பம்’ என்று அவரது கவிதை நடைக்குள் நுழைந்தவர்கள் இன்னும் வெளியே வரவில்லை.
கதையைக் கவிதையாக்கித் தரும் கலைநுட்பம் லா.ச.ரா-வுக்கு மட்டுமே உரித்தானது. அவரின் ‘காயத்ரீ’ விர்ரென்று வானம் பாயும் சிம்புட்பறவை. சொற்கள் வாக்கியங்களாய் கைகோத்து நின்றுகொண்டு, அவர் நினைத்ததைச் சொல்லப் பேராவல் கொள்ளும் அதிசயம் அவர் படைப்புலகின் தனித்தன்மை. ‘‘கடிகாரத்தின் விநாடிகள் ஒன்றன்பின் ஒன்றாய் தம்மைச் சொடுக்கிக்கொண்டு சுவரிலிருந்து புறப்பட்டு இருளோடு கலந்தன” என்ற லா.ச.ரா-வின் வரிகளில் காலம் கைகட்டி நிற்பதைக் காண முடிகிறது.
- முனைவர் சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி.