

ஆர்.கே. நாராயணனை நினைவுகூர்ந்தது (‘தி இந்து’ அக்டோபர்-9) மனநிறைவைத் தந்தது. அவரது கதைகள் யதார்த்தமாகவும் எளிமையாவும் இருக்கும். மொழிநடை அலங்காரமில்லாது படிப்பவரை ஈர்க்கும் சக்திவாய்ந்தது. அவர் ராஜ்யசபாவில் ஆற்றிய உரை பற்றிக் குறிப்பிட்டிருக்கலாம்.
அவ்வுரையில் பிஞ்சுக் குழந்தைகள் மிகவும் சுமையான புத்தக மூட்டையைப் பள்ளிக்குச் சுமந்து செல்லும் நிலையினின்று விடுவிக்கப்பட வேண்டும் என்று உணர்ச்சிகரமாக வேண்டுகோள் விடுத்தார். அதன் விளைவாக, பேரா. யஷ்பால் தலைமையில் அமைக்கப்பட்ட குழு ‘சுமையின்றிக் கற்றல்' என்ற தனது அறிக்கையில் குழந்தைகளின் மீது திணிக்கப்படும் பல்வேறு சுமைகளையும் அடையாளங்காட்டி, பள்ளிய முறைகளில் மாற்றங்களைக் கொண்டுவர சீரிய பரிந்துரைகளை அளித்தது. 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை. மேலும் கூடுதலாகவே குழந்தைகள் சுமக்கின்றனர்.
அவருடைய ஒரு கதையை தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் தனது பாடநூல் ஒன்றில் சேர்த்தது. தன்னிடம் அனுமதி பெறவில்லை என்று அவர் எழுதிய கடிதத்துக்கு, பாடநூல் நிறுவனம் ‘ஆண்டுக்கு 10 லட்சம் வீதம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் உங்களை அரைக் கோடி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு நீங்கள்தான் நன்றி தெரிவிக்க வேண்டும்' என்ற தோரணையில் பதிலெழுதினர். உடனே அவர் வழக்கு தொடர்ந்தார். பாடநூல் நிறுவனத்தார் அவரைச் சந்தித்து சமாதானப்படுத்தும்படி என்னைக் கேட்டுக்கொண்டனர். கோவையில் மகளுடன் தங்கியிருந்த அவரைச் சந்தித்தபோது தன் சீற்றத்தை வெளிப்படுத்தினார். ஒரு கதாசிரியனிடம் அனுமதி பெற வேண்டும் என்று புரிந்துகொண்டால் போதும் என்று சொல்லி, வழக்கில் ஆர்வம் இல்லை என்று தெரிவித்தார்.
- ச.சீ. இராஜகோபாலன்,
கல்வியாளர், சென்னை.