

பாரதி பாஸ்கரின் ‘எழுதப்படாத கவிதைகள் எங்கே?' -பெண்ணின் கண்ணீரைப் பற்றிப் பெண்ணின் கண்ணீராலேயே எழுதப்பட்டதைப் போன்றதொரு காவியம்.
ஆப்பிரிக்க அமெரிக்கக் கவிஞரான மாயா ஏஞ்சலோவின் ‘என்னை ஓய்வெடுக்க விடு' -யுகயுகமாய்ப் பெண்களின் மவுனக் கதறலே காலங்காலமாய்த் தன் உணர்ச்சிகளுக்குத் திரைபோட்டு ஊமை வாழ்க்கை வாழும் பெண்களின் மத்தியில், ஆண்டாளின் அசுரக் காதலும் ஔவையின் சங்கப் பாடலில் உள்ள பெண்ணின் உக்கிரமமான காதலும் பிரமிக்க வைக்கின்றன.
‘கேஸ் அடுப்பில் தலையைக் கொடுக்குமுன், தன் இரு குழந்தைகளுக்கும் காலை உணவைத் தயார்செய்து பத்திரப்படுத்திய பின்தான் கேஸ் அடுப்பில் தலையைக் கொடுத்தார் பெண் கவிஞர் சில்வியா’ என்ற செய்தி மனதை உலுக்கிவிட்டது. ‘ஒரு பெண் எல்லா இடங்களிலும் தாயாகவே இருக்கிறாள்' - மரண தேவன் அழைத்தபோதும், சில்வியாவைப் போல. நெருப்பில் சாம்பலான கவிதைகள், கிழித்து எறியப்பட்ட கவிதைகள், கரையானால் அரிக்கப்பட்ட கவிதைகள் எவை எவை? - கேள்வி சூறாவளிக் காற்றாய் மனதைச் சுழற்றி அடிக்கிறது. இக்கட்டுரையின் தாக்கம் நித்திரையை நிறுத்திவைத்திருக்கிறது.
- ஜே. லூர்து,மதுரை.