

தனிமனித வழிபாட்டைத் தொடங்கி வைத்தவர் தந்தை பெரியார் என்றும், எதையும் கேள்வி கேட்டு சிந்திக்கச் சொன்ன அவர் தனது இயக்கத்துக்குள் அந்த உரிமையை அளிக்காத சர்வாதிகாரியாக இருந்தார் என்றும் கட்டுரையாளர் கூறியிருப்பது பிழையானது.
தந்தை பெரியார் தனது இயக்கத்தின் அடுத்த கட்டத் தலைவர்களுக்கு கொடுத்த இடத்தை எந்தத் தலைவரும் கொடுத்திருக்க மாட்டார்கள். தன்னை அதிகமாகப் புகழ்ந்தவர்களை சந்தேகத்துடன் பார்த்தவர் அவர்.
- அருள்மொழி,மின்னஞ்சல் வழியாக…
பெரியார் கட்டுரையை மிகவும் கவலையோடு படித்தேன். பெரியார் ஒருபோதும் தன் செல்வாக்கை நிலைநிறுத்த அரசியல் செய்ததில்லை. கூட்டம் சேர்க்கப் பணம் செலவழித்ததில்லை. சமூகத்தில் மண்டிக்கிடந்த சாதிக் கொடுமை எதிர்ப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, அதிகாரப் பகிர்வு, ஒடுக்கப்பட்டோர் விடுதலை என்று பன்முக ஆளுமையோடு சிந்துத்துச் செயல்பட்டவர் அவர். அவற்றையெல்லாம் மறைக்கும் நோக்கத்தைதான், கட்டுரையில் பார்க்க முடிகிறது.
-கி. நாவுக்கரசன்,ராணிப்பேட்டை.
பெரியார் பற்றிய கட்டுரையில் கட்டுரையாளர் கூற வருவது தனிமனித வழிபாட்டை எதிர்த்துதானே தவிர பெரியாரை எதிர்த்து அல்ல. எந்தக் கட்சியிலுமே எதிர் கருத்துக்கள் இருக்கக் கூடாது என்றுதான் எதிர்பார்க்கிறார்கள். அதற்குத் தலைவர்கள்தான் காரணம். ஜனநாயகக் கட்சி என்று மார் தட்டிக்கொள்ளும் கட்சியிலேயே கூட எதிர்க் கருத்துக்கள் தெரிவித்தவர்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். சில கட்சிகளில் கை கட்டி வாய் பொத்தித்தான் தலைவர்கள் முன் நிற்கிறார்கள். இதெல்லாம் சர்வாதிகாரமில்லாமல் வேறு என்ன?
- கிருஷ்ணசாமி,‘தி இந்து’ இணையதளம் வழியாக…